சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகின்றன.
இதனிடையே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன். அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பிரபாசுடன் பிராஜெக்ட் கே படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
நீண்ட காலங்களுக்கு பிறகு கிராமத்து கதைக்களத்தில் நடிக்கும் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் புதுமையான முயற்சிகளுக்கு எப்போதுமே கைக்கொடுப்பவர். அவரது பல படங்கள் வெளியான காலகட்டத்தில் சரியான புரிதல் இல்லாமல் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது அந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு சரியான உதாரணம் வேட்டையாடு விளையாடு. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரிலீசான காலகட்டத்திலும் சரியான வரவேற்பைதான் பெற்றது. ஆனாலும் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களை கவர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது.
கடந்த ஆண்டில் கமல்ஹாசன் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்த படங்களை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிவித்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது லைகா நிறுவனத் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாஸ் லீட் கேரக்டரில் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் இணையவுள்ளார். தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயனின் SK21 மற்றும் சிம்புவின் STR48 ஆகிய படங்களை தயாரிக்கிறார் கமல்ஹாசன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு அஸ்திவாரம் போட்டு வருகிறார். கமலின் பழக்கம் என்னவென்றால், சினிமாவில் தான் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே இன்வெஸ்ட் செய்வதுதான். அவருக்கு சொத்து சேர்த்து பழக்கம் இல்லை என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள KH233 படத்தின் கதைக்களம் கிராமத்து பின்னணியாக அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்தையும் அதன் பிரச்சினைகளையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாம். நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதைக்களத்தில் களமிறங்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவர் எந்த வட்டார வழக்கில் பேசுவார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிராஜெக்ட் கே படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே படத்தின் ஓடிடி உரிமையை மிக அதிகமான விலைக்கு நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ஸ்கிரிப்டை மேலும் செதுக்கும் முயற்சியில் ஹெச் வினோத் ஈடுபட்டுள்ளார். படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.