நியூயார்க்: புதிதாக துவங்கப்பட்டுள்ள, ‘த்ரெட்ஸ்’ சமூக வலைதளம், ‘டுவிட்டரின்’ அப்பட்டமான நகல் என குற்றஞ்சாட்டியுள்ள, அந்நிறுவனம், ‘மெட்டா’ மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.
கடும் அதிருப்தி
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மெட்டா நிறுவனம், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது.
இதன் தலைமை செயல் அதிகாரியாக, மார்க் ஸக்கர்பர்க் உள்ளார். மெட் டாவின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இடையே நீண்ட காலமாகவே கடும் வர்த்தக போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை, ‘டெஸ்லா’ கார் தயாரிப்பு நிறுவன அதிபரும், அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கினார்.
எலன் மஸ்க் தலைமை ஏற்ற பின், டுவிட்டரில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
இது, பயனாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டுவிட்டருக்கு மாற்றாக வேறு சமூக வலைதளங்களை அவர்கள் தேட துவங்கினர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மெட்டா நிறுவனம், டுவிட்டரை போலவே அச்சு அசலான, ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய சமூகவலைதளத்தை சமீபத்தில் துவக்கியது. 100 நாடுகளில் அறிமுகமான இந்த சமூகவலைதளம், துவங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கோடிக் கணக்கான பயனாளர்களை பெற்றது.
இது டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்குக்கு, டுவிட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பைரோ, கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், டுவிட்டர் நிறுவனத்தின் தொழில் ரகசியங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியும், அதன் முன்னாள் ஊழியர்களை பணியமர்த்தி, தங்கள் அறிவுசார் சொத்துரிமையை அபகரித்து உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதற்கு பதில் அளித்த, மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், ‘த்ரெட்ஸ் பொறியாளர்கள் குழுவில், டுவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் ஒருவர் கூட பணியாற்றவில்லை. இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு’ என, விளக்கம் அளித்து உள்ளார்.
‘போட்டியை ஏற்றுக் கொள்கிறோம், மோசடியை பொறுத்துக் கொள்ள முடியாது’ என, எலான் மஸ்க் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த கடிதம் வாயிலாக, மெட்டா நிறுவனத்தின் மீது, அறிவுசார் சொத்துரிமையை டுவிட்டர் நிறுவனம் கோர உள்ளதும், சட்ட ரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொள்ள தயாராகி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து, அந்த இரு பெரும் சமூகவலைதள நிறுவனங்கள் இடையே பெரிய அளவில் மோதல் வெடிக்க துவங்கி உள்ளது.
மேலும், த்ரெட்ஸ் செயலியில், தனி நபர்கள் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த த்ரெட்ஸ் வலைதளம், ஐரோப்பிய யூனியனில் மட்டும் இன்றும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தனி நபர் தகவல் பாதுகாப்பில் அந்நாடுகள் கடுமையான விதிகளை பின்பற்றுவதே காரணமாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்