கலவர பூமியான மேற்கு வங்கம்.. உள்ளாட்சித் தேர்தலில் 9 பேர் கொலை! குண்டு சத்தங்களுடன் வாக்குப்பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீத இடங்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூலை 8 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. தேர்தல் பரப்புரைகளின்போது கட்சியினர் இடையே மோதல், வெட்டு குத்து சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் 12 முதல் 18 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். மேலும் மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று உடைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குச்சாவடியில் உள்ள மேடைகள் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் பதிவாகி உள்ளதால் வாக்களிக்க செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள்.

ரெஜிநகர், துஃபான்கஞ்ச், கர்கிராம் ஆகிய பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது. தொம்கோல் பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் கூட்டு சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதாக அக்கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.

தேர்தல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ள மத்திய படைகள் என்ன செய்கின்றன எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. மக்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய படைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அக்கட்சி தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் பிர்கச்சா என்ற பகுதியில் சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் அப்துல்லா என்பவர் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பிபியின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டு உள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். சாலையில் டயர்களை எரித்து அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இதேபோல் இன்று மட்டும் வன்முறையால் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். தொடரும் வன்முறை சம்பவங்களால் மேற்கு வங்கமே பதற்ற நிலையில் உள்ளது.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.