சண்டிகர்: 2 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஒன்று, இன்னமும் நீங்கவில்லை.. இணைய தளம் முழுவதும் அந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வரும் விவேக்குமார் என்பவர், பிரகாஷ் தாபா என்ற ஒரு அசைவ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு செல்வாராம்.. ரெகுலராக வந்துபோவதால், அக்கவுண்ட்கூட இவருக்கு இங்கு இருக்கிறதாம்.
இப்படித்தான் சம்பவத்தன்று, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றுள்ளார்.. மொத்த குடும்பமும், அசைவ உணவுகளையே ஆர்டர் செய்திருக்கிறார்கள்.. சிறிது நேரத்தில், ஓட்டல் ஊழியரும், ஆர்டர் செய்யப்பட்ட உணவை கொண்டு வந்து வைத்திருக்கிறார்..
அதிர்ச்சி: விவேக்குமார் மட்டன் குழம்பு ஆர்டர் செய்திருக்கிறார்.. சாப்பாட்டில் குழம்பை எடுத்து ஊற்றியதுமே, ஒரு பெரிய பீஸ் வந்து விழுந்துள்ளது.. இதுவரைக்கும் மட்டன் குழம்பிலும் சரி, மட்டன் பிரியாணியிலும் சரி, இவ்வளவு பெரிய சைஸ், பீஸ் பார்த்ததே இல்லையே என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஆனாலும், அந்த பீஸ் பார்ப்பதற்கு , மிகப்பெரிய சைஸில் இருக்கவும், முழு காடை என்று நினைத்திருக்கிறார்.. அப்படியே இருந்தாலும், நாம் ஆர்டர் செய்யாத, காடையை எப்படி நமக்கு கொண்டு வந்து வைத்தார்? ஒருவேறு யாருக்கோ செல்ல வேண்டிய உணவு, தவறி டேபிள் மாறி வந்துவிட்டதோ என்று குழம்பினார்..
மிதந்த எலி: பிறகுதான் அந்த பீஸை உற்று உற்று பார்த்தால், அது மட்டனும் இல்லை, காடையும் இல்லை, செத்து மிதப்பது எலி என்று தெரியவந்தது.. இதை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்து, ஹோட்டல் ஓனரிடம் ஓடியிருக்கிறார்கள்.. மட்டன் குழம்பில் மிதக்கும் எலி பற்றி புகாரும் தந்திருக்கிறார்கள்.. ஆனால், புகாரை மறுத்த ஓனர், அந்த குடும்பத்தையே மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலுக்கும், விவேக்குமாருக்கும் ஏதோ “பில் தகராறு” இருக்கிறதாம்.. அதற்காகவே, விவேக்குமார் இப்படியெல்லாம் ஒரு டிராமா போடுகிறார் என்று ஹோட்டல் ஓனர் குற்றம்சாட்டினார்.. ஆனால், எதையுமே காதில் வாங்காத விவேக்குமார், நடந்த சம்பவங்கள் அத்தனையையும் வீடியோவாக பதிவு செய்தார்.. முக்கியமாக, அந்த எலி கிரேவியையும் வீடியோ எடுத்து, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்..
வீடியோ: இந்த புகாரின்பேரில், அந்த ஓட்டல் ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. அதேசமயம், சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டலுக்கே சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இதனிடையே, விவேக் குமார் எடுத்த “எலி குழம்பு” வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி மூக்கை துளைத்து கொண்டிருக்கிறது.