மணிப்பூரில் குறிப்பிட்ட இடங்களுக்கு இணைய சேவை வழங்க ஐகோர்ட் உத்தரவு! முடிவுக்கு வரும் 2 மாத தடை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கே மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மைத்தேயி இன மக்களுக்கும் குக்கி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலமே போர்க்களம் போல மாறியிருக்கிறது. பல இடங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது.

வன்முறை: மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தி மீண்டும் அமைதியைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கே பாதுகாப்புப் படையினரும் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதனால் அங்கே வன்முறை குறைந்ததாகத் தெரியவில்லை. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் குடியிருப்புகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதனால் அங்கே ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த வன்முறை காரணமாக அங்கே மே 3ஆம் தேதி முதல் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இணையச் சேவையை வழங்க மணிப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி: பொய்யான தகவல்கள் வேகமாகப் பரவி வன்முறையை அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே இணையச் சேவை முடக்கப்பட்டது. இருப்பினும், 2 மாதங்களைக் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இணையச் சேவை முடக்கப்பட்டதில் என்ன தான் பயன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக மணிப்பூர் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மணிப்பூரில் இணையச் சேவை தடையால் பில் செலுத்துவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை, தேர்வுகள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் எனப் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் இணையச் சேவையை வழங்குமாறு கடந்த ஜூன் 20ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு: சனிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்த நிலையில், அரசு நிறுவனங்கள் பயன்படுத்தும் லீஸ் லைனில் இணையத் தடையை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், வீடுகளுக்கான குறிப்பிட்ட அளவு இணையச் சேவையையும் வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், குறிப்பிட்ட மொபைல்களுக்கு படிப்படியாக இணையச் சேவை வழங்குவது குறித்தும் பரிந்துரைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே இணையச் சேவையை படிப்படியாக அனுமதித்து அது தொடர்பான அறிக்கையை அடுத்த 15 நாட்களில் சமர்ப்பிப்பதாக மணிப்பூர் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். யாருக்கு எல்லாம் இணையச் சேவை வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் பின்னரே இணையச் சேவை வழங்கப்படும் என்பதால் இதில் தவறு நடக்க வாய்ப்பு இருக்காது என்று மணிப்பூர் ஐகோர்ட் கூறியது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.