பீஜிங்-அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் யெல்லன் சீனா சென்ற நிலையில், தைவான் கடல் மற்றும் வான் பகுதியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது.
சொந்தம்
நம் அண்டை நாடான சீனாவில், 1949ல் நடந்த உள்நாட்டு போருக்குப் பின், தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.
‘அவசியம் ஏற்பட்டால், தைவானைக் கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ என, சீனா எச்சரித்து வருகிறது. இதற்கேற்றாற்போல், தைவானின் வான் மற்றும் கடல் எல்லைகளில் போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பி மிரட்டுவதையும் சீனா வழக்கமாக வைத்துள்ளது.
தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொள்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தைவானை தனி நாடாகச் செயல்பட விடவேண்டும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில், அந்நாட்டு நிதி அமைச்சர் ஜானெட் யெல்லன், நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகளை களையும் வகையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதிலடி
இந்நிலையில், ஜானெட் வருகையைத் தொடர்ந்து, வழக்கம்போல் தைவானின் வான் மற்றும் கடல் எல்லைகளில் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை சீன ராணுவம் நேற்று குவித்துள்ளது.
இது குறித்து, தைவான் ராணுவ அமைச்சகம் கூறியதாவது:
நான்கு சீன விமானங்கள், இரண்டு எஸ்.யு., 30 போர் விமானங்கள், பி.இஸட்.கே., 005 என்ற உளவு விமானம், ஒய்., 8 என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் ஆகியவை, தைவான் ஜலசந்தியின் எல்லைக்கோட்டை கடந்துள்ளன. கடல், வான் மற்றும் நிலப் பரப்புகளில் நிலைமையை உற்று நோக்கி வருகிறோம். தேவைப்பட்டால் பதிலடி கொடுக்க ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே, தைவான் எல்லை பகுதியில் உள்ள சீன ராணுவத்தின் தலைமையகத்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஷீ ஜின்பிங், படைத் தளபதிகளுடன் போர் பயிற்சி குறித்து ஆலோசனை நடத்தியதுடன், படைகளின் திறனை அதிகரிக்க உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துஉள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்