பிரம்மாபூர்: அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட திப்ருகர் – கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை எழுந்ததால் பயணிகள் அச்சமடைந்து ரயில் இருந்து அலறியடித்துக்கொண்டு இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எஸ்க்பிரஸ் ரயில், ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென புகை கிளம்பியது. இதனால், அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
புகை கிளம்பியதால் ரயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் கீழே இறங்கினர். தண்டவாளத்தில் இருந்த சாக்குப்பை ஒன்று ரயிலின் சக்கரத்தில் பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தின் காரணமாகவே புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர், பிரேக் பகுதி பரிசோதிக்கப்பட்டு, அரைமணி நேரம் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டது. புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.