விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், உயர்ரக வகை நாய்க்குட்டிகள் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இப்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.
நடிகர் விஜய்காந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் இருவரில், சண்முகப்பாண்டியன் ஏற்கெனவே நடிகராகிவிட்டார். ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடித்த அவர் அடுத்து ‘குற்றப்பரம்பரை’ நாவலின் அடிப்படையில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கிறார். இதனிடையே சினிமா, அரசியல் இரண்டிலும் இறங்காத மூத்த மகன் விஜய பிரபாகரன், உயர்ரக நாய்க்குட்டிகளின் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று ‘டாக் ஷோ’க்களில் அவரது செல்ல நாய்கள் பரிசுகளையும் குவித்து வந்திருக்கின்றன. இந்நிலையில் விஜய பிரபாகரன் என்டர்டெயின்மென்ட் ஏரியாவிலும் கால்பதித்துள்ளார்.

வி.ஜெ.பி. என்ற பெயரில் பொழுதுபோக்குத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் முதல் முயற்சியாக டராக்டிகல் கான்சர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்துகிறார்.
பிரமாண்ட நடக்கவிருக்கும் இந்த இசைக்கச்சேரியில் அமெரிக்க ராப் இசை பாடகர் 50 சென்ட் பங்கேற்று பாடல்கள் பாடுகிறார். சர்வதேச அளவில் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற ராப் இசை பாடகரான இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் வருகிற நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. “The Final Lap Tour 2023” என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 50 சென்ட்-இன் “Get Rich or Die Tryin” ஆல்பத்தின் 20-வது ஆண்டு விழாவையும் நினைவுகூருகின்றனர்.

இதுகுறித்து விஜய பிரபாகரன் தெரிவித்திருப்பதாவது…
“அமெரிக்க ராப்பிசைப் பாடகரான 50 சென்ட் இந்தியாவிற்கு கடந்த 2017-ல் வந்திருக்கிறார். அதன் பின், இவ்வாண்டு நவம்பரில்தான் வரப்போகிறார். இந்த நிகழ்ச்சியில் 50 சென்ட்-இன் வரலாறும், அவரது பிரபலப் பாடல்களும் இடம்பெறும். என் அப்பாவுக்கென (விஜயகாந்த்) தனி அடையாளம் இருக்கிறது. அதை முன்னெடுத்துச் செல்லும் வழியில் நான் காலடி எடுத்து வைக்கிறேன்” என்கிறார் அவர்.