சென்னை: இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் படத்தின் முதல் பாகம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்தியாவில் இந்த படத்தின் பிரத்யேக ஸ்க்ரீனிங் திரையிடப்பட்டது.
இந்நிலையில், ரசிகர்களுக்காக நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ள டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்க்க நச்சுன்னு உள்ள ஒரு 7 காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க..
1. டாம் க்ரூஸ்: மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தை பார்க்க மிக முக்கியமான ஒரே காரணம் என்று சொன்னால் அது படத்தின் ஹீரோ நம்ம டாம் க்ரூஸ் தான். 61 வயதிலும் அவர் டூப் போடாமல் சாகச காட்சிகளில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்துள்ளார்.

அதிலும் அந்த கிளைமேக்ஸ் பைக் ஸ்டன்ட் காட்சிக்காகவும் அதற்காக அவர் 6 மாத காலம் எடுத்துக் கொண்ட பயிற்சி மற்றும் பல முறை அந்த ஒரு காட்சிக்காக எடுத்த ரிஸ்க்கான ஸ்டன்ட் பிராக்டீஸ்க்காகவும் கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்.
2. காமெடியான கார் சேஸிங்: கிளைமேக்ஸ் பைக் ஸ்டன்ட் காட்சி மட்டும் தான் ஹைலைட் செய்யப்பட்ட நிலையில், தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் முதல் பாதியில் வரும் அந்த டப்பா கார் ஸ்டன்ட் காட்சி உங்களை நிச்சயம் ஒரு 15 நிமிடத்துக்கு சிரிப்பலையில் ஆழ்த்தி விடும்.

டாம் க்ரூஸ் படமா இல்லை ஜாக்கி சான் படமா என்கிற மாயையே இந்த மிஷன் இம்பாசிபிள் படம் நமக்குள் கடத்தி விடும்.
3. ஏஐ வில்லன்: படத்தின் ஓபனிங் சீனிலேயே ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தான் இனிமேல் உலகத்தை நாசமாக்கப் போகிற வில்லன் என்பதை உணர்த்தி விடுவார்கள். டாம் க்ரூஸ் குழுவின் சிஸ்டத்தையே ஹேக் செய்து டாம் க்ரூஸை அந்த ஏஐ மெஷின் ஓடவிட்டு ஒரு முட்டுச் சந்துக்குள் அடி வாங்க வைக்கும் காட்சியும் தாறுமாறு ரகம் தான்.
முதல் பாகத்தை விட ஏஐ வில்லத்தனம் இரண்டாம் பாகத்தில் தான் அதிகம் இருக்கும் என தெரிகிறது. ஏஐ சில டாப் ஏஜென்ட்டுகளை வில்லனாக்கி எப்படி இந்த படத்தில் மிரட்டுகிறது என்பதை பார்க்கவே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

4. கிளைமேக்ஸ் ரயில் காட்சி: முதல் பாதியில் எப்படி அந்த குட்டி கார் வில்லன் ஆட்களிடமும் போலீஸாரிடமும் இருந்து தப்பிக்கிறது என்பதைக் காட்டி ரசிகர்களை சிலிர்க்க வைக்கின்றனரோ அதே போல கிளைமேக்ஸில் வரும் அந்த பாலம் வெடித்து ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக கீழே விழ கடைசி பெட்டியில் மாட்டிக் கொண்டு நிற்கும் ஹீரோவும் ஹீரோயினும் எப்படி ஒவ்வொரு பெட்டியாக தப்பிக்கின்றனர் என்கிற காட்சி விஷுவல் ட்ரீட்.
5. பாம் பஸல்: ஹீரோ டாம் க்ரூஸுக்கே சொல்லாமல் அவரது குழுவில் உள்ள நண்பர்கள் ஒரு சூட்கேஸில் உள்ள பாம் பஸலை கண்டுபிடிக்கும் காட்சியும் செம காமெடியாகவும் திக் திக் நிமிடங்களுடனும் ரசிகர்களை வயிறு கலங்க வைத்து விடும்.
6. பக்கா என்டர்டெயின்மென்ட்: டாம் க்ரூஸ் படம் ஒரே ஆக்ஷனாக இருக்கும் எப்படி குடும்பத்துடன் சென்று பார்ப்பது என்றெல்லாம் யோசிக்கவே வேண்டாம். ஒரு லிப் கிஸ் காட்சி கூட இல்லை. பக்காவான என்டர்டெயின்மென்ட் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ஜாய் பண்ணுவாங்க..
7. தமிழ் டப்பிங்: ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் திரைப்படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது.