கர்நாடகத்தில் மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு ஊக்குவிப்பு

பெங்களூரு:-

பழங்குடியினர் நலன் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாகேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கல்யாண கர்நாடக

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பெயர் பெற்று விளங்குகிறது. விஜயநகரில் குஸ்தி, விஜயாப்புராவில் சைக்கிள் பயிற்சி பிரபலமாக உள்ளது. அது போல் மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு திறன் கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். முதல்-மந்திரி சித்தராமையா சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

கல்யாண கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை பழங்குடியினரின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பதை அறியஒரு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளோம்.

விளையாட்டு மைதானம்

இந்த பட்ஜெட்டில் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு ரூ.1,588 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் காடு குருப, ஜேனுகுருப, குரகு போன்ற வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். 11 மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவு தற்போது 6 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது. இதை 12 மாதங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு தங்கும் விடுதிகளை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பொருட்கள் அரங்கம் அமைக்க ரூ.5 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு நாகேந்திரா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.