‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கடந்த அத்தியாயத்தில் ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) ஏற்படும் அபாயமுள்ள பச்சிளம் குழந்தைகள் குறித்து கண்டோம். இந்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவினை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
பச்சிளம் குழந்தைகளில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவு 45 mg/dL கீழே குறைந்தால், அதனை ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) என்போம். கர்ப்ப காலத்திற்குரிய எடையில் இருந்து மிகக் குறைவாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் (Small for Gestational Age/SGA) 52% குழந்தைகளிலும், நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளில் (Infant of Diabetic Mothers/ IDMs) 48% குழந்தைகளிலும், கர்ப்பகாலத்திற்குரிய எடையில் இருந்து மிக அதிகமாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் (Large for Gestational Age/LGA) 47% குழந்தைகளிலும், குறைமாத பச்சிளங்குழந்தைகளில் 54% குழந்தைகளிலும் ரத்தச் சர்க்கரை குறைவு காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் பிறக்கும் குழந்தைகளில் 40% மேல், எடை குறைவாக இருப்பதால், இக்குழந்தைகளில் ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் மிக அதிகம். எனவே, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் அதிகமுள்ள பச்சிளங்குழந்தைகளில் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததிலிருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகளில் ஒவ்வொரு 6-8 மணிநேரத்திற்கும் ரத்தச் சர்க்கரை அளவினை கண்டறிய வேண்டும்.

ரத்த நாளம் வழியாக ஊட்டச்சத்து (parenteral nutrition) பெறும் பச்சிளங்குழந்தைகளில் முதல் 72 மணிநேரம் ஒவ்வொரு 6-8 மணிநேரத்திற்கும் ரத்தச் சர்க்கரை அளவினை கண்டறிய வேண்டும், பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முறை என்று சர்க்கரை அளவினை கண்டறிய வேண்டும். இவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள குழந்தைகளில் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை செய்வதன் மூலம், ரத்தச் சர்க்கரை குறைவு தீவிரமாக மாறி அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே கண்டறிந்து, சிகிச்சையளிக்க முடியும்.
ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை செய்ய குளுக்கோஸ் மானி/ குளுக்கோமீட்டர் (Glucometer) பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறு பெரியவர்களில் விரல் நுனியில் ஊசியால் குத்தப்பட்டு, வெளிப்படும் ரத்தத் துளியில் குளுக்கோமீட்டர் கொண்டு குளுக்கோஸ் அளவு கண்டறியப்படுகிறதோ, அதைப்போல், பச்சிளங்குழந்தைகளில், குதிகாலில் (heel prick) ஊசியால் குத்தப்பட்டு, வெளிப்படும் ரத்தத் துளியில் குளுக்கோஸ் அளவு கண்டறியப்படும். பச்சிளங்குழந்தைகளின் விரல்களின் தோலுக்கும் விரல் எலும்புக்கும் இடைவெளி மிகக்குறைவு என்பதால், பெரியவர்கள் போன்று, ரத்தச் சர்க்கரை பரிசோதனைக்கு விரல்கள் பயன்படுத்தப்படாமல், குதிகால் பயன்படுத்தப்படுகிறது. குளுக்கோமீட்டர் கொண்டு செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனையில் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை உறுதிப்படுத்த, ரத்த நாளத்திலிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படும். எனினும், குளுக்கோமீட்டரில் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரை குறைவு அடிப்படையில் உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும்.

ரத்தச் சர்க்கரை குறைவு, பச்சிளங்குழந்தையில் ரத்தச் சர்க்கரை குறைவின் அறிகுறி உள்ளதா என்பதன் அடிப்படையில், அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவு (Symptomatic Hypoglycemia) மற்றும் அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு (Asymptomatic Hypoglycemia) என்று இருவகைப்படும்.
பல சமயங்களில், பச்சிளங்குழந்தைகளில் காணப்படும் ரத்தச் சர்க்கரை குறைவில் எவ்வித அறிகுறிகளும் இருக்காது. ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம். மாறாக, அறிகுறிகள் இருந்து, அதனைத் தொடர்ந்து ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு ரத்தச் சர்க்கரை குறைவு உறுதிப்படுத்தப்பட்டால், அதனை அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம்.
ரத்தச் சர்க்கரை குறைவின்போது, மூளைக்கு ஆற்றலைத் தரும் குளுக்கோஸ் குறைபாட்டின் காரணமாகவும், ரத்தச் சர்க்கரை குறைவுக்கு எதிராக உடலில் அதிகரிக்கும் அட்ரீனலின் (Adrenaline) மற்றும் அசிடைல்கொலின் (Acetylcholine) காரணமாகவும் ரத்தச் சர்க்கரை குறைவின் அறிகுறிகள் தோன்றுகின்றன. உடல் நடுக்கம், வலிப்பு, உடல் தளர்ச்சி, உடல் நீலமடைதல், பலவீனமான அல்லது உச்ச தொனியுடைய அழுகை, மூச்சுத் திணறல், சரியாக பால் குடிக்காமல் இருப்பது போன்றவை ரத்தச் சர்க்கரை குறைவின்போது ஏற்படும் அறிகுறிகளாகும்.
சில நேரங்களில், தீவிர ரத்தச் சர்க்கரை குறைவினால் தாழ்வெப்பநிலை மற்றும் இதயச் செயலிழப்பு கூட ஏற்பட்டுள்ளன. மேற்கூறிய அறிகுறிகள் ரத்தச் சர்க்கரை குறைவில் மட்டுமன்றி தீவிர நோய்த்தொற்று, மூளைக் காய்ச்சல், இதய பிரச்சனைகள், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் போன்ற பிற பிரச்னைகளிலும் இருக்கலாம் என்பதால், இந்த அறிகுறிகள் தென்படும்போது, குளுக்கோமீட்டர் கொண்டு ரத்தச் சர்க்கரை அளவு கண்டறியப்பட்டு, குறைவாக இருப்பின் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

மாறாக, ரத்தச் சர்க்கரை சரியான அளவாக இருப்பின், அறிகுறிகள் அடிப்படையில் குழந்தையை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, அதன் காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.
அடுத்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுகிறது, அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவு மற்றும் அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
பராமரிப்போம்…