சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புளுடன் ஜூலை 14ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: மாவீரன் திரைப்படம் வெளியாக இன்னும் இரு தினமே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் படுஜோராக நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில், டிரைலரில் இந்திய ஜனநாயகக் கட்சியை பிரதிபலிக்கும் கொடிகள் இடம்பெற்றிருந்தால், கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றம் செய்யப்படாமல் படம் வெளியிடப்பட்டால், படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று விசாரணை: இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் வி வெங்கடேசன் ஆஜராகி, சிகப்பு – வெள்ளை – சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியை படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நீதிபதி உத்தரவு: இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகள் என 40 விநாடிகள் என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியிட வேண்டும்: அதேசமயம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமெனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.