உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த 24 வயதுப் பெண் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பலத்தக் காயமடைந்த அந்தப் பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காவல்துறைக்கும் தகவல் தரப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிடம் விசாரிக்க முடியாததால், பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறையினர், “நொய்டாவைச் சேர்ந்த அந்த இளம்பெண், எம்.பி.ஏ படித்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் மூலம் 23 வயது இளைஞர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நட்பாகப் பழகிவந்த நிலையில், அது காதலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவந்தது, கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். மேலும், இந்தக் காதலுக்கு தடைவிதித்து, திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணிடமிருந்த செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் இரண்டாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்தப் பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு அவரின் பெற்றோர்தான் காரணம். பாதிக்கப்பட்ட பெண் கண் விழித்ததும் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.