வாரணாசி: கியான்வாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரிய வழக்கில் ஜூலை 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இது, மசூதியின் வளாகச் சுவரில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள்.
இந்துக்கள் தரப்பில் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் விசாரித்தது. அதேபோல் கியான்வாபி மசூதி குழுவினர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் விசாரித்தது. இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.