ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனையொன்றில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 நோயாளிகள், சிகிச்சைக்குப் பிறகு தாங்கள் கண்பார்வை இழந்துவிட்டதாக முன்வைத்த குற்றச்சாட்டு, கடந்த சில நாள்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில், நோயாளிகளின் குற்றச்சாட்டை மருத்துவ நிர்வாகம் மறுத்துவிட்டது. இவ்வாறிருக்க, தற்போது அதே ராஜஸ்தானில் வேறொரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர், ஆக்ஸிஜன் மாஸ்க் எரிந்து உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனந்த்புரா தாலாப்பில் வசிக்கும் வைபவ் ஷர்மா என்பவர், கடந்த நான்கு நாள்களுக்கு முன் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் வெடிப்பு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு Direct Current (DC) கார்டியோவர்ஷன் ஷாக் சிகிச்சையின் போது, அவரது முகத்திலிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க் தீப்பிடித்து, அவரது கழுத்தில் ஒட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, மின்சார சுவிட்ச் போர்டிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியால், நோயாளி உடல் கருகி இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அந்த சமயத்தில் மருத்துவ பணியாளர்கள் யாரும் நோயாளிக்கு உதவவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதைத்தொடர்ந்து அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரும் உறவினர்களும், மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனையில் திரண்டனர்.

பின்னர் இதனை அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி ஜி.கே. வியாஸ், இதுவொரு தீவிரமான சம்பவம் என்று குறிப்பிட்டு, கோட்டா காவல் கண்காணிப்பாளர், கோட்டா தலைமை சுகாதார அதிகாரி, கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு, ஜூலை 24-ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பவத்தின் உண்மை தன்மை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் முன் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.