’எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்க’ சர்பிராஸ்கான் குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை வைத்தே இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்பிராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்பிராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்பிராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விடவும் மிகஅதிகம். இது தவிர சர்பிராஸ்  கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83.  ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடமில்லை.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சர்பிராஸ்கானின் உடல் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தும் காட்டியுள்ளார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட சர்பிராஸ்  கானுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதனைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்பினர் தேர்வு குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  முதல் போட்டி  வெஸ்ட் இண்டிஸில் துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் ஷர்மாவிடம் சர்பிராஸ் கான் மற்றும் ரிங்கு சிங்கிற்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ருதுராஜ், ஜெய்ஸ்வால் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் அபாரமாக செயல்பட்டதால் இந்திய அணியில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக அணியில் 15-16 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.  ஆனால் எல்லா வீரர்களுக்கும் ஒருநாள் அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ஆகவே ரிங்கு சிங், சர்பிராஸ் கான் ஆகியோருக்கு, அவர்களுக்கான நேரம் வரும்போது நிச்சயம் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.