மும்பை: பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படங்களில் மிக முக்கியமானது தூம் சீரிஸ்.
இதுவரை 3 பாகங்களாக வெளியாகியுள்ள தூம் படத்தின் 4ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முக்கியமாக தூம் 4ல் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராய்யும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
சல்மான் கானுடன் இணையும் ஐஸ்வர்யா ராய்:இந்தியில் 2004ம் ஆண்டு வெளியான தூம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சஞ்சய் காத்வி இயக்கிய இப்படத்தில் அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம், உதய் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததால், அடுத்தடுத்து 2 பாகங்கள் என மொத்தம் 3 பாகங்கள் வரை வெளியானது தூம்.
இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிபாஷா பாஸு ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல், மூன்றாம் பாகத்தில் அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதுவரை வெளியான தூம் படத்தின் 3 பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 2000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனால், இப்படத்தின் 4ம் பாகத்தை எடுக்க யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் முடிவெடுத்துள்ளதாம்.
இந்தப் படத்தை 2025ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில், தூம் 4ல் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதன்முறையாக தூம் சீரிஸ் படங்களில் சல்மான் கான் நடிக்கலாம் என்ற தகவல், ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சல்மான் கான் – ஐஸ்வர்யா ராய் காதல் உலகமே அறிந்தது. ஐஸ்வர்யா ராய் வீட்டு முன்பு மது போதையில் சல்மான் கான் அடித்த அட்ராசிட்டியெல்லாம் அப்போது ஊடகங்களில் பயங்கரமாக வைரலாகியிருந்தது. அதன்பின்னர் சல்மான் கானை பிரிந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். அதன்பின்னர் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

அதனால் தான் தூம் 4ல் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதில் சல்மான் கானுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தூம் 2ம் பாகத்தில் சன்ஹேரி என்ற கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், 4ம் பாகத்திலும் அதே ரோலில் நடிக்கவுள்ளாராம். இது சல்மான் கானை விரட்டி விரட்டி காதலிக்கும் கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தூம் 4 படத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான 3 பாகங்களிலும் ஏசிபி ஜெய் தீட்சித் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் அபிஷேக் பச்சன். அதே கேரக்டரில் தான் தூம் 4ம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இன்னொரு லீடிங் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.