சென்னை: விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் வைத்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிவரும் படம் லால் சலாம்.
கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் கிரிக்கெட் மீது ஆர்வமும் பயிற்சியும் மிக்க இவர்கள் இருவரும் இணைந்தது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
லால் சலாம் டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷ்ணு விஷால்: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்ற பெருமையை பெற்றிருப்பவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி. இந்த பெருமை இருந்தபோதிலும் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக எப்போதும் இவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு முஷாபிர் என்ற இசை ஆல்பத்தையும் 4 மொழிகளில் வெளியிட்டார்.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது லால் சலாம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்டன. ரஜினியின் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஞானவேல் இயக்கத்திலும் ரஜினி தனது அடுத்தப்படத்திற்காக இணையவுள்ளார்.

இதனிடையே தன்னுடைய தந்தையை தான் இயக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றும், அவர் ஒரு ப்யூர் மேஜிக் என்றும் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ரஜினியின் போர்ஷன்கள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த சூட்டிங்கில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, நேற்றைய தினம் லால் சலாம் சூட்டிங் ஸ்பாட் அதிகமான கொண்டாட்டத்துடன் காணப்பட்டது.
படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் மற்றும் படத்தின் 2வது ஷெட்யூல் நிறைவு இரண்டையும் படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக கேக் வெட்டப்பட்டு, ஐஸ்வர்யா ரஜினி, அவருக்கு ஊட்டிய நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நிறைவையும் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் வலம்வந்தவர் விஷ்ணு விஷால். ஆனால் வாழ்க்கை அவரது கேரியரை மாற்றி அவரை சினிமா நடிகராக மாற்றிய நிலையில், முன்னதாக ஜீவா என்ற கிரிக்கெட் சம்பந்தமான படத்திலும் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். தொடர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடியும். இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட லால் சலாம் படத்தில் இவர் நடித்துவருகிறார். இதில் சிறப்பான விஷயம், ரஜினியுடன் இணைந்து இவர் நடித்துள்ளார்.