தனுஷின் பிறந்தநாள் ட்ரீட் ஆக, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகிறது என்பதால், டீசரை செதுக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. அதில் தனுஷுடன், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் என பலர் நடித்துள்ளனர். 1930 ஆண்டில் நடக்கும் பீரியட் படமாக தயாராகியுள்ளது. இசை, ஜி.வி.பிரகாஷ். இதன் படப்பிடிப்பு சென்னை, குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தனுஷ் அடுத்து டி-50 படத்திற்கு சென்று விட்டார். ‘டி 50’யின் டைட்டில் ‘ராயன்’ என சொல்லி வருகிறார்கள். தனுஷின் கேரக்டர் பெயர் ராயன் என்பதால், அதனையே டைட்டிலாக வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் 50வது படமான ‘டி 50’ஐ சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் 50 வீடுகள் சூழ செட் அடைத்திருந்தனர். இப்போது அதை இன்னும் பெரிதாக்கி, 600 வீடுகள் சூழ, பிரமாண்ட ஏரியாவையே செட் போட்டுள்ளனர். இதற்கிடையே தனுஷின் பிறந்தநாள் இம்மாதம் 28ம் தேதி வருவதால், ‘கேப்டன் மில்லர்’ டீசரை வெளியிட உள்ளனர். பிறந்த நாளை முன்னிட்டு தனுஷின் ரசிகர்கள், அன்றைய தினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தலைமைக் கழக ரசிகர்கள் சார்பில் ‘டீசரை’ விழா எடுத்து கொண்டாட உள்ளனர். ஏற்கெனவே சாலிகிராமம் பகுதிகளில் பொதுமக்களுக்கு (300 பேருக்கு மேல்) மதிய உணவு வழங்கி வருகின்றனர். 28ம் தேதி அன்று ஆயிரம் பேருக்கு காலை உணவு மற்றும் பிரியாணி விருந்து வைக்கவும் திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

‘டி 50’ல் இயக்குநர் தனுஷ், இப்போது எஸ்.ஜே.சூர்யா, சந்திப்கிஷன் கூட்டணியின் காட்சிகளை படமாக்கி வருகிறார். இன்னமும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கவில்லை. சமீபத்தில் அவர் மொட்டையடித்துள்ளதால், ‘ராயன்’ கேரக்டருக்கு லேசான தலைமுடியுடன் கூடிய மொட்டை கெட்டப் தேவை என்பதால், தனுஷ் இன்னமும் அவரது போர்ஷனை இயக்காமல் இருக்கிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஹீரோயின்கள் தொடர்பான காட்சிகள் எடுக்கப்படவிருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ டீசர் வரும் நாளுக்கு முந்தைய நாளில் ‘டி50’யின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகவும் திட்டமிட்டு வருகின்றனர்.