'மாவீரன்' தோல்வி அடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? : சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த படம் மாவீரன். இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், மாவீரன் தோல்வி அடைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது: இந்தப் படத்திற்கு வெற்றி கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது. நான் மிமிக்ரி செய்து டிவியில் இருந்து வந்தவன். காமெடியை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும்.

என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு பர்பார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் (மாவீரன் இயக்குனர்) விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான். மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

முதல் பாதி சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி எமோஷனலாகவும் ஆக்ஷன் காட்சிகளுடனும் சிறப்பாக வந்திருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள். சிறந்த படத்துக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதை இதற்குக் கொடுத்திருந்தோம். அதை ஏற்றுக் கொண்டு வெற்றி கொடுத்த மக்களுக்கு நன்றி. வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.