அண்ணாமலை பாதயாத்திரை | சிறப்பு விமானத்தில் வரும் அமித் ஷா – ராமேசுவரத்தில் 2,500 போலீஸார் பாதுகாப்பு

ராமநாதபுரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை ராமேசுவரத்தில் தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விமானம் மூலம் நாளை மறுநாள் மதுரை வருகிறார். இதற்காக ராமேசுவரத்தில் 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரயை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (ஜூலை 28-ம் தேதி) ராமேசுவரத்தில் தொடங்குகிறார். இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து, விழா மேடையில் பேசுகிறார். இவ்விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களான முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ராமேசுவரம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னதாக நாளை மறுநாள் பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் மாலை 5 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேசுவரம் சென்று தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு, அதன்பின்னர் ராமேசுவரம் பேருந்துநிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்கிறார். பின்னர் யாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார். இரவு ராமேசுவரம் தனியார் விடுதியில் தங்கும் அமித் ஷா, காலையில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பகல் 1.30 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு: அமித் ஷா வருகையை முன்னிட்டு ராமேசுவரத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்ட 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிகள், 60 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் கூறும்போது, “மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் 1100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 65,000 இந்நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர். மேலும் மாநில முழுவதும் இருந்து வரும் பாஜகவினர் என 1 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.