இந்துார், மத்திய பிரதேசத்தில் இன்ஜினியர் மாணவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், 19 வயது மாணவி உட்பட நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் இந்துாரைச் சேர்ந்த இன்ஜினியர் மாணவர் பிரபாஸ் என்ற மோனு, 22, தன் நண்பர்கள் டிட்டு, ரச்சித் உடன் நேற்று முன்தினம் அங்குள்ள மஹாகாளேஸ்வர் கோவிலுக்கு காரில் சென்றார்.
அவர்கள் சென்ற காரை வழிமறித்த தன்யா, 19, என்ற மாணவி உள்ளிட்ட நால்வர், திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின், மாணவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் கத்தியால் குத்தப்பட்ட பிரபாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைஅடுத்து, தன்யாவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார், தன்யா உள்ளிட்ட நால்வரை நேற்று கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காரில் சென்ற டிட்டு, ரச்சித் ஆகியோருடன் தன்யா பழகி வந்த நிலையில், அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு, பிரபாஸ் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தன்யா அங்குள்ள கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிப்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் வந்த மூவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement