புதுச்சேரி:
“யார் யாருக்கோ வாலாட்டிவிட்டு பதவியில் இருக்கும் திண்டுக்கல் ஐ. லியோனி, என்னை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
பட்டிமன்ற பேச்சாளரான திண்டுக்கல் ஐ. லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திமுக அரசு அமர்த்தியது. தமிழக அரசின் இந்த செயலுக்கு அப்போதே பல எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக, பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய அவரது பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இருந்தபோதிலும், தனது முடிவில் இருந்து அரசு பின்வாங்கவில்லை. இதனிடையே, சமீபகாலமாக ஏதேனும் சர்ச்சைகளில் லியோனி சிக்கி வருகிறது.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ஐ. லியோனி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனையும் கடுமையாக விமர்சித்தார். அதாவது, புதுச்சேரியில் தமிழிசை செளந்தராஜன் தான் முதல்வராக இருக்கிறார் என்றும், ரங்கசாமி அவரது பேச்சை கேட்டு வெறும் தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்டு வருவதாக லியோனி பேசியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தமிழக பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி என்ன சொல்கிறார் என்றால், தலையாட்டி பொம்மையை போல முதல்வர் ரங்கசாமி இருக்கிறாராம். நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால், யார் யாருக்கெல்லாமோ வாலாட்டி விட்டு பதவியை பெற்ற நீங்கள் முதல்வர் ரங்கசாமியையும், என்னையும் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” எனக் கேள்வியெழுப்பினார்.