திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணி முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியதோடு, புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். 2019 மக்களவைத் தேர்தல் முதல் அவர் கட்சிக்காக முன்னெடுத்த பிரச்சாரங்கள் குறித்தும் பேசினார்.
அண்ணாமலை மேற்கொண்டுள்ள பாத யாத்திரையை அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், அது பாதை யாத்திரை அல்ல, பாவ யாத்திரை. 2002இல் குஜராத்தில் நிகழ்த்திய மதக் கலவரம், 2023இல் மணிப்பூரில் அரங்கேறும் அவலம் ஆகியவற்றுக்காக நடைபெறும் பாவ யாத்திரை என்று கூறினார்.
திமுகவை பாஜகவினர் வாரிசு அரசியல் செய்துவருவதாக கூறி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அது குறித்துப் பேசினார். பாஜகவில் வாரிசு அரசியலில் பதவி பெற்றவர்களின் பட்டியலை வாசித்தால் ஒரு மணி நேரம் போதாது என்றார். அரசியல் எதிரிகளை சலைவை செய்யும் எந்திரமாக அமலாக்கத்துறையை பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இது நாடறிந்த ரகசியம்.
உதயநிதியை பாராட்டிய முதல்வர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மிகவும் நெகழ்ச்சியுடன் பேசினார். “முந்தைய நாள் இரவே என்னிடம் இந்த தீர்மானங்களை என்னிடம் இளைஞரணிச் செயலாளர் காட்டி அனுமதி பெற்றார். தீர்மானங்களை பார்த்த பின்னர் எனது மகிழ்ச்சி பல மடங்கு கூடிவிட்டது. எனக்கு நிம்மதி வந்துருச்சு இப்போ, நான் பிறந்த பலனை இப்போது அடைந்து விட்டேன். கழகத்தின் மீது ஆர்வமுடன் இருக்கும் 15 முதல் 35 வரை அணியில் இணைக்கும் விதமாக நீங்கள் நிறைவேற்றிய இல்லம் தோறும் இளைஞரணி எனக்கு மிகவும் பிடித்த தீர்மானம். கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருவது கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அடுத்த தலைமுறையினர் திமுகவை கட்டியெழுப்ப வந்துவிட்டனர் என்று பொருள்படும்படி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் இடத்தில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசும் போது, உங்களை நினைத்து எனக்கு தூக்கமே வருவதில்லை. காலையில் எழுந்ததும் யார் எந்த பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற பயத்துடனே எழ வேண்டியுள்ளது என்று மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
ஆனால் உதயநிதி தலைமை பொறுப்பு வகிக்கும் இளைஞரணி நிகழ்வில், மகிழ்ச்சி பல மடங்கு கூடிவிட்டது. நிம்மதி வந்துருச்சு, பிறந்த பலனை இப்போது அடைந்து விட்டேன் என்று முதல்வர் கூறியிருப்பது கவனம் பெற்று வருகிறது.