
பவன் கல்யாணுக்கு முதலமைச்சர் பட்டம் சூட்டிய லெஜன்ட் நாயகி
சிலர் பொது மேடையில் பேசும்போது வாய் தவறி இன்னொருவரின் பெயரையோ பட்டங்களையோ மாற்றி கூறிவிடுவார்கள். ஆனால் மிக பொறுமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிவிடும் சோசியல் மீடியாவில் கூட இதுபோன்ற குழப்பம் நடக்கும் என நிரூபித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.
கடந்த வருடம் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். தற்போது தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ரோ என்கிற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாணுடன் இந்த படத்தில் நடித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‛‛நடிகர் பவன் கல்யாணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாணுடன் ப்ரோ படத்திற்காக திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது பதிவு வெளியான நிமிடத்தில் இருந்து அதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் ஊர்வசி ரவுட்டேலாவை விமர்சித்தும், கிண்டலடித்தும் கருத்துக்களை வெளியிட துவங்கினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஊர்வசியின் கவனத்திற்கு இது தெரிய வந்ததும் உடனே தனது பதிவில் குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு பவன் கல்யாண் காரு என்று மாற்றிவிட்டார் ஊர்வசி ரவுட்டேலா.