மாவட்ட வாரியாக விளையாட்டுத் துறை திட்ட பயனாளி விவரம் பராமரிக்கப்படுவது இல்லை: அனுராக் தாக்குர்

புதுடெல்லி: விளையாட்டு வீரர்களுக்கானத் திட்டங்களில் பலன்பெற்றவர் விவரங்களை மாவட்ட வாரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை திமுக எம்பி கனிமொழியின் கேள்விகானப் பதிலாக மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளில், ”ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்கான திட்டங்களின் விவரங்கள் மற்றும் அத்தகைய திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை என்ன? குறிப்பாக தமிழ்நாட்டில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை? நலத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறும் முன்னாள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் மாவட்ட வாரியாக என்னென்ன?” எனக் கேட்டிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்த எழுத்துபூர்வமான பதில்: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ‘ஸ்போர்ட்ஸ் ஃபண்ட்’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர வருமானம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இது தொடர்பான விவரங்கள் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் https://yas.nic.in இருக்கின்றன. நாட்டில் இருக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக, ‘பண்டிட் தீன்தயாள் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நல நிதியம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை, விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றுக்காக நிதி உதவி செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியாக பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் https://yas.nic.in. கிடைக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியத் திட்டம் ஆகியவற்றில் மாவட்ட வாரியாக பயன்பெற்றோரின் விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.