புதுடில்லி, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே, காரசாரமான விவாதம் நடந்தது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு நடைமுறையில் இருந்தது.
இதன்படி, காஷ்மீருக்கென தனி அரசியல் சாசனம், கொடி, தன்னாட்சி அதிகாரம் போன்ற சலுகைகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த 2019, ஆக., 5ல், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் இந்த சட்டப் பிரிவை நீக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதில், ஜம்மு – காஷ்மீர், சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்ததில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை, திங்கள், வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்து, தினசரி அடிப்படையில், ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள், சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், இந்த வழக்கில் நேற்று விசாரணை துவங்கியது. மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தன் வாதத்தை நேற்று துவக்கினார்.
வழக்கு தொடர்பாக அவர் விரிவாகவும், மற்ற வழக்கறிஞர்கள் சுருக்கமாகவும் வாதங்களை முன்வைக்கும்படி அமர்வு கூறியிருந்தது.
சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
முதல் நாளிலேயே, நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
கபில் சிபல் தன் வாதத்தை இன்றும் தொடர்கிறார்.
நீதிபதிகள் கேள்வி!
வழக்கின் விசாரணையின்போது, அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:அரசியல் சாசனத்தின், 370வது பிரிவின்படி, ஜம்மு – காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பரிந்துரையின்படியே, இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியும்.எந்த ஒரு அரசியலமைப்பு நிர்ணய மன்றமும், எந்த கால நிர்ணயமும் இல்லாமல் இருக்க முடியாது. மேலும், 1957ல் இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கலைக்கப்பட்டது. தற்போது அதுபோன்ற அமைப்பு இல்லாத நிலையில், சிறப்பு அந்தஸ்தை நீக்க பரிந்துரைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? 370வது பிரிவின்படி, சிறப்பு அந்தஸ்து என்பது தற்காலிகமான ஒரு ஏற்பாடாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இல்லாததால், அந்த அந்தஸ்தை எப்படி நிரந்தரமாக அளிக்க முடியும்?இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கபில் சிபல் வாதம்
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தன் முதல் நாள் வாதத்தின்போது கூறியுள்ளதாவது:அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பரிந்துரை இல்லாமல், சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் எங்களுடைய வாதம்.அரசியல் நோக்கத்தோடு, 370வது பிரிவை நீக்கி, பார்லிமென்டை ஒரு அரசியல் களமாக்கியுள்ளனர். இது அரசியலமைப்பு நடவடிக்கை அல்ல. அரசியலமைப்பு நிர்ணய மன்றமாக, பார்லிமென்ட் செயல்பட முடியாது.மக்களின் விருப்பத்தை ஏற்று, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கூறியுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மக்கள் விருப்பத்தை அவர்கள் கேட்டனரா? இவ்வாறு அவர் வாதிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்