காவிரியில் மேகதாது அணை… அந்த விஷயம் பக்காவா முடிஞ்சுது… தமிழகத்திற்கு பெருசா ஷாக் கொடுத்த கர்நாடகா!

மேகதாது அணை என்றாலே தமிழகத்தில் பரபரப்பு தொற்றி கொள்ளும். கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா பகுதி வறட்சியின் விளிம்பில் தள்ளப்படும். ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இப்படித்தான் தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், பல்வேறு தன்னார்வலர்களும் குமுறி வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது உறுதியா ?
கர்நாடகா அரசு திட்டம்

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பல கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கி சர்வே உள்ளிட்ட பணிகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை மேற்பார்வை செய்யும் வகையில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேகதாது அணை பற்றிய அரசியல் தமிழகம் – கர்நாடகா இடையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு அழுத்தம்

இந்த விவகாரத்தில் டெல்லியில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதை பார்க்கலாம். அணை கட்ட அனுமதிக்காதீர்கள். அப்படி செய்தால் எங்களுக்கு பெரிய பாதிப்பு வரும் என்று அவ்வப்போது தலைநகரை நோக்கி பயணங்களும், கடிதங்களும் பறந்த வண்ணம் இருக்கின்றன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

மேகதாது அணை கட்டுமானம்

இவ்வாறு தகித்து கொண்டிருக்கும் விஷயத்தில் மேலும் எண்ணெய் ஊற்றும் வகையில் கர்நாடகாவில் இருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, மேகதாது அணை கட்டுவதற்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் இறுதி செய்யப்பட்டு, அதை கையகப்படுத்தும் பணிகளும் முடிந்துவிட்டன. 60 நாட்களில் வனப்பகுதியில் உள்ள மரங்கள் கணக்கெடுப்பு பணிகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும் என்று கர்நாடகா வனத்துறை பாதுகாவலர் மாலதி பிரியா தெரிவித்துள்ளார்.

பருவமழையும், கான்கிரீட் தூண்களும்

அதுமட்டுமின்றி அணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி 20 மீட்டருக்கு ஒரு மரக்குச்சியை நட்டு வைத்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மேற்குறிப்பிட்ட மரக்குச்சிகள் சேதம் அடைந்துவிட வாய்ப்புள்ளது. இந்த சூழலில் சிறிய அளவில் கான்கிரீட் தூண்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இழப்பீடு வழங்க முடிவு

இதுதவிர அணை கட்டும் பகுதியில் தொடர் ஆய்வுகளை செய்து, அந்தப் பகுதியில் எவ்வளவு தண்ணீரை தேக்கி வைக்கலாம். எந்தெந்த கிராமங்கள் பாதிக்கப்படும் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருப்பதாக தெரிகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் கையகப்படுத்தும் நிலத்திற்கு பதிலாக மாற்று நிலம் வழங்குவதா? இல்லை இழப்பீடு தொகை வழங்குவதா? என்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.