Jailer: சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் டு ரஜினி படத்தில் மிரட்டலான நடிப்பு; சரவணன் மகிழ்ச்சி

ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஜெயிலர்’ படத்துக்கான ஷோ கேஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சின்னத்திரையிலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சரவணனும் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான ஷோ கேஸிலும் சரவணன் நடித்த காட்சி இடம்பெற்றிருந்தது. பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். `பருத்திவீரன்’ படத்தில் நடிகர் காரத்தியின் சித்தப்பாவாக நடித்ததன் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக பல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். கோலமாவு கோகிலா, கார்கி உள்ளிட்ட படங்களிலும் நடிந்திருந்தார்.

சரவணன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடிப்பதை நடிகர், நடிகைகள் பலரும் பெருமையாகவே கருதுவார்கள். அதிலும் பிற ஆர்ட்டிஸ்டுகளைவிட சரவணனுக்கு ரஜினி பட வாய்ப்பு என்பதில் இன்னொரு கூடுதல் செய்தி இருக்கிறது.

ஏனெனில் சரவணன் பள்ளி மாணவராக இருந்த போதே ரஜினியால் ஈர்க்கப்பட்டு ரஜினி ரசிகர் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். ரஜினி பட ரிலீஸின்போது சரவணன் தியேட்டர்களில் செய்த அலப்பறையை அவர் நெருக்கமான நண்பர்கள் கூறினர்.

“ஒன்பதாவது படிக்கிறபோது சேலம் சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு அதே மன்றத்துக்குத் தலைவரானார். ரஜினி படம் ரீலீஸ்னா அவர் தலைமையிலான கேங்கின் அமர்க்களத்தைக் கேக்கவே வேண்டியதில்லை. ரஜினி படத்துல நடிக்கிற மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்திருந்தாங்கன்னா அன்னைக்கு கைகலப்பு இல்லாம இருந்தா ஆச்சரியம். ’துடிக்கும் கரங்கள்’ படம் வெளியானப்ப ஜெய்சங்கர் ரசிகர்களுக்கும் சரவணன் கேங்குக்கும் அடிதடியே வந்துச்சு. அந்தளவு வெறித்தனமான ரஜினி ரசிகரா இருந்தார்.

சரவணன்

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த பின்னாடி ரசிகர் மன்றத்துல தொடர்ந்து ஈடுபட முடியாத சூழல்லயும் மன்றத்தின் கௌரவ ஆலோசகரா அவரை நியமிச்சிருந்தாங்க. ரஜினி பட ரிலீஸ் நாட்கள், அவருடைய பிறந்த நாட்கள்ல பொதுமக்களுக்கு உதவிகள், ரத்த தான முகாம்கள்னு நல்ல காரியங்களையும் நிறைய செய்தார். இன்னைக்கு முதன்முதலா ரஜினி சார் படத்துலயே நடிச்சிருக்கிறது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். நிச்சயம் சரவணன் அதில் சிறப்பாக நடித்திருப்பார். ’’ என மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கின்றனர் சரவணனின் நட்பு வட்டத்தினர்.

“சரவணனின் ரஜினி மன்றத் தொடர்பு குறித்து இயக்குநர் நெல்சனுக்கும் ரஜினிக்கும் தெரிந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

jailer |ஜெயிலர்

எப்படியோ. ஒரு காலத்தில் ’தலைவா’ என திரையை நோக்கி குரல் கொடுத்த சரவணன். அந்தத் தலைவனுடன் சேர்ந்து அதே திரையில் தோன்றப் போகிறார்.” என அவர் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

வாழ்த்துகள் `சித்தப்பு’ சரவணன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.