புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் மக்களவை இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 ம் தேதி தொடங்கியது. ஆக.11 ஆம் தேதி வரை கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் மக்களவை கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பின. அவையில் வெட்கம், அவமானம் என்ற முழக்கங்கள் எழுந்தபோது, சபாநாயகர்,” நீங்கள் கேள்வி நேரத்தை நடத்த விரும்பவில்லையா, முக்கியமான மசோதாக்கள் மீது விவாதிக்க விரும்பவில்லையா? நீங்கள் அவையைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லையா? என்று எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்பினார். இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை நிறுத்தாததால் சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவையும் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.