இஸ்லாமாபாத்: தனது கைது எதிர்பார்க்கப்பட்டதே என்றும், கட்சித் தொண்டர்கள் உறுதியான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்துள்ளார்.
இந்நிலையில், கைது ஆவதற்கு முன் இம்ரான் கான் பேசிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது: “இந்த வீடியோ உங்களை வந்தடையும்போது நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். எனவே, உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்காதீர்கள்.
இதுவரையிலான எனது முயற்சிகள் எதுவும் எனக்கானது அல்ல. எனது மக்களுக்காக, எனது சமுதாயத்துக்காக, உங்களுக்காக. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. உங்கள் உரிமைக்கா நீங்கள் உறுதியாக நிற்காவிட்டால் நீங்கள் அடிமை வாழ்க்கையை வாழ நேரிடும். அடிமைகளுக்கு வாழ்க்கை என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பின்னணி: இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.