புதுடெல்லி: காங்கிரஸின் மூத்த மாநிலங்களவை எம்.பி., ரஜனி அசோக்ராவ் பாட்டீலை மீண்டும் அவையில் சேர்க்க வேண்டும் என்று சிறப்பு உரிமைக் குழு முன்மொழிந்ததைத் தொடர்ந்து அவரது இடைநீக்கம் இன்று (ஆக.7) ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறப்பு உரிமைக் குழு, “அவையினுள் எடுக்கப்பட்ட வீடியோவை மூத்த எம்பி ரஜனி பரப்பியதற்காக சிறப்புரிமையை மீறியவராக அவர் கருதப்படுகிறார். இதற்காக அவர் கடந்த நான்கு மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கம் தண்டணையாக கருதப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாநிலங்களவையில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து அதை வெளியில் பகிர்ந்ததற்காக பட்ஜெட் கூட்டத்தொடரிடன் எஞ்சிய நாட்களுக்கு ரஜனி பாட்டீல் பிப்.10-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார். பாஜக எம்.பி. ஜி.வி.எல் நரசிம்மராவ் ரஜனிக்கு எதிராக அவைத்தலைவர் ஜக்தீப் தன்கரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுப்பட்டது. நரசிம்ம ராவ் ரஜனியை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தான் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் எம்பி கூறிய போதிலும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. ரஜனியின் இடைநீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜனி, நான் சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. எனக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இப்படி குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக கடுமையான தண்டனை வழங்கப்பட்டது அநீதியானது.வேண்டுமென்றே என்மீது குற்றம்சாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்” என்று தெரிவிதித்ருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் நாடாளுமன்றம் வந்த அவர், நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.