சென்னை: தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி கடந்த 2019ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதியன்று தரம் உயர்த்தப்பட்டது. புதிய மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நெமிலிச்சேரி, வானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளன.
148 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சியில் 6.12 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாலைகளின் தரம் உயரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த தொழில் முனைவோரான ஆர்.குரு என்பவர் கூறியதாவது: நல்ல சாலை வசதிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் உள்ள பல சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. பல சாலைகள் இன்னும் மண் சாலைகளாக உள்ளன.
சீரமைக்கப்பட்ட சாலைகளும் தரமான முறையில் சீரமைக்கப்படாததால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, ஆவடி காமராஜ்நகர் சாலை ஓராண்டுக்கு முன்புதான் சீரமைக்கப்பட்டது. ஆனால், இச்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதேபோல், பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அதே சமயம், சில வார்டுகளில் முக்கியப் பிரமுகர்கள், வார்டு உறுப்பினர்கள் வசிக்கும் தெருக்கள் மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
கல்லூரி பேராசிரியை என்.சுவர்ணலதா கூறியது: ஆவடி மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மழைக் காலத்தில் சாலையில் உள்ள சிறிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பள்ளத்தில் சிக்கி நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல், சாலைகளின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
இதனால், குறுகலான சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு கஷ்டமாக உள்ளது. குறைந்தபட்சம் சாலையில் உள்ள பள்ளங்களையாவது சீரமைத்து, பொதுமக்கள் சிரமமின்றி வாகனம் ஓட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

காந்தி தெரு.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில் மொத்தம் 716 கி.மீட்டர் நீளத்
துக்கு சாலைகள் உள்ளன. ஒரு கி.மீட்டருக்கு கான்கிரீட் சாலையும், 2 கி.மீட்டருக்கு தார் சாலையும் அமைக்க தலா ரூ.1 கோடி செலவாகும். மொத்த சாலையையும் அமைக்க ரூ.700 கோடி தேவை. ஆனால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.70 கோடிதான் வரி வருவாய் கிடைக்கிறது. இதில், ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளுக்கு மாதம்தோறும் ரூ.5 கோடி செலவாகிறது. இவ்வளவு நிதி நெருக்கடியிலும் பல வார்டுகளில் சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளன.
ஆவடி மாநகராட்சியில் மே 2021 முதல் தற்போது வரை 137.85 கிமீ நீளத்துக்கு ரூ.72.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் இதுவரை 89.01 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 48.84 கிமீ நீளத்துக்கு சாலை பணி நடைபெற்று வருகிறது. மேலும் நகர்ப்புற ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் 2.78 கிமீ நீளத்துக்கு ரூ. 3.16 கோடி மதிப்பீட்டில் சாலை பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டமும், குடிநீர் திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில்தான் சாலை அமைக்க வேண்டும் என்பது அரசு விதியாக உள்ளது. அதன்படி, இப்பணிகள் முடிந்ததும் அனைத்து வார்டுகளிலும் சாலை அமைக்கப்படும் என்றனர்.