“கொத்தடிமைக் கூட்டமான திமுக, அதிமுக-வை விமர்சிப்பது வெட்கக்கேடானது!” – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

டெல்லி மசோதா (Delhi Service Bill) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதனால் டெல்லி அரசின் அதிகாரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!

ஸ்டாலின்

எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்! மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.” என்றவர்,

தொடர்ந்து. “மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” என அதிமுகவையும் சாடினார்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக #DelhiServiceBill எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை நேற்று நாடாளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

1975-ம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980-ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும். மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது.” என விமர்சித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.