‘ஜெயிலர்’ படம் கிளப்பிய விவகாரம் அனைவரும் அறிந்ததே. பொதுவாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் தலைகாட்டுவதை, பேசுவதை அவ்வளவாக விரும்பாத சன் டி.வி அதிபர் கலாநிதி மாறன் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்துப் பேசிய வார்த்தைகளும், அங்கு ரஜினி சொன்ன காகம் – கழுகு கதையும் வைரலாகின.
விளைவு… சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல், கலாய் மீம்கள் தெறித்தன.
`சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இந்தப் பட்டத்துடன் அழைக்கப்படுகிற ஒருவர் என்றால் இன்றைய தேதிக்கு ரஜினிகாந்த் மட்டுமே. தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பிற மொழி சினிமா துறைகளில் `சூப்பர் ஸ்டார்’ என்பது ரொம்பவே பொதுவான ஒரு வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அங்கே அனைத்து முன்னணி நடிகர்களையும் இப்படி அழைப்பது உண்டு.

பேன் இந்தியா படங்கள் வரத்தொடங்கியபோது இதில் பல குழப்பங்கள் நேர்ந்தன. ஒவ்வொரு நடிகரும் இப்படி தங்களுக்கு அடைமொழி வைத்து தங்களை புரொமோட் செய்துகொள்கின்றனர். இதில் ஒருவரின் அடைமொழிக்கு இன்னொருவர் போட்டிப் போடுவது, அதை எடுக்க நினைப்பது போன்றவை பகிரங்கமாக சம்பந்தப்பட்ட நடிகர்களின் வாயிலாக என்றுமே நடந்தது இல்லை. அத்தகைய பிரச்னைகள் ரசிகர்களின் இணையச் சண்டை என்பதாகவே வெளிப்பட்டிருக்கிறது.
சரி, இப்ப கட்டுரையின் மெயின் மேட்டருக்கு வருவோம். இதுவும் அப்படியான ஒரு அடைமொழி (டைட்டில்) பிரச்னைதான்.
‘ஜெயிலர்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிகர் சரவணனும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வரும் முன் சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் இவர்.
“ரஜினி சார் ரசிகனா இருந்தவன் இப்போ அவருடன் நடிக்கறேன், என் வாழ்க்கையில் இது தரமான சம்பவம்” என விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் அவர்.
ஹீரோவாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்து ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தவருக்கு அப்போது ரசிகர் கூட்டம் இருந்தது. பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன. ரசிகர்களும் காணாமல் போனார்கள். அவருக்கு ‘கம்பேக்’ போல ‘பருத்தி வீரன்’ அமைய பழைய ரசிகர்கள் மீண்டும் திரண்டனர்.
சரவணனின் சொந்த ஊரான சேலம் மற்றும் கரூர் பகுதிகளில் இப்போதும் இவரின் ரசிகர்கள் தீவிரமாக இயங்கிவருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் ‘ஜெயிலர்’ ரிலீஸாவதை ஒட்டி தஞ்சைப் பகுதியில் சில போஸ்டர்கள் சரவணன் ரசிகர்களால் ஒட்டப்பட்டன. அதில் ‘இளைய தளபதி’ என சரவணனைக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து விஜய் ரசிகர்கள் சிலர் அந்த போஸ்டர்களைக் கிழித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது,
“90-களில் சேலம் நாலு ரோடு ஜங்ஷன்ல ஒரு கூட்டம். ‘நம்மூர்க்காரன் ஒருத்தன் சினிமாவுக்குப் போயிருக்கான்’னு வீரபாண்டி ஆறுமுகம், சரவணனுக்கு இந்தப் பட்டத்தைத் தந்தார். சினிமாவுக்குன்னு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் வேண்டாமா? `தளபதி’ன்னே பட்டம் தந்துடலாம்தான். ஆனா, சென்னையில ஏற்கெனவே ஒரு தளபதி (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டாராம்) இருக்கிறதால, இவருக்கு `இளைய தளபதி’ன்னு கொடுத்துடலாம்’னு சொல்லித் தந்தார். தொடர்ந்து அவர் நடிச்ச படங்களில் டைட்டில் கார்டுல ‘இளைய தளபதி’ன்னு இருந்தது.
இதற்கிடையில விஜய் அப்பா எஸ்.ஏ.சி, விஜய்க்கு இந்தப் பட்டத்தைச் சூட்டிவிட்டார். இதுதான் உண்மை. இப்போது விஜய் ‘தளபதி’ ஆகிவிட்டதால், நாங்களே திரும்பவும் ‘இளைய தளபதி’ பட்டத்தைப் பயன்படுத்த சரவணனை வற்புறுத்திட்டிருக்கோம்” எனத் தெரிவிக்கின்றனர், மேற்படி போஸ்டர் ஒட்டிய சரவணன் ரசிகர்கள்.

சரவணனிடமே பேசினோம்.
“விஜய் படத்துல ‘இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்ததுமே, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸுக்கே போய் ‘என் டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர், ‘உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார். அதேநேரம் அடுத்தடுத்த விஜய் படங்கள்ல ‘இளைய தளபதி’ன்னே போட்டுக்கிட்டு வந்தாங்க. என்ன நினைச்சு அவர் சொன்னாரோ, எனக்கும் அதுக்குப் பிறகு படங்களும் அமையலை. நானும் ஒதுங்கிட்டேன். ‘உனக்குப் படம் அமைஞ்சா பட்டத்தைப் போட்டுக்கோ’ன்னு அவங்கப்பாதானே சொன்னார். இப்ப எதுக்கு என் ரசிகர்கள் ஒட்டின போஸ்டர்களைக் கிழிக்கணும்?” என்று கேள்வியுடன் முடித்தார் சரவணன்.
இது என்னங்க புது பிரச்னையா இருக்கு!