"இப்படி ஒரு பிரதமரை இதுவரை பார்த்ததே இல்லை".. முகம் சிவந்த ராகுல் காந்தி

டெல்லி:
“ஒரு மாநிலமே பற்றி எரிகிறது.. ஆனால் அதை பற்றி எதுவுமே பேசாமல் வேறு விஷயங்களை பற்றி மோடி பேசுகிறார். ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை” என்று குரல் தழுதழுக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று மோடி பங்கேற்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். ஆனால் தனது உரையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதையும் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி கூறியதாவது:

மணிப்பூர் கலவரம் மூன்று மாதங்களாக தொடர்நது கொண்டிருக்கிறது, பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தை உலக நாடுகளே கவலையுடன் பார்த்து வருகின்றன. ஆனால், நமது பிரதமரோ அதை பற்றி துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மணிப்பூர் கலவரம் தொடர்பான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளை பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மணிப்பூருக்கு செல்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா என்கிற கருத்தியலையே பாஜக கொலை செய்துவிட்டது. ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. வேறு யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பு இல்லை. கொள்ளவில்லை. குறைந்தபட்சம், மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிட்டிருக்க வேண்டும். அதை கூட அவர் செய்யவில்லை.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம்.. பொய் புகார்கள் அதிகம்.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல வாய்ப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றை கூட பிரதமர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மூன்று மாதங்களாக ஒரு மாநிலம் பற்றி எரியும் போது ராணுவத்தை அங்கு அனுப்பி இருக்க வேண்டாமா? ராணுவத்தை மணிப்பூருக்கு அனுப்பாது ஏன் என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கும் மணிப்பூருக்கு இனிமேலாவது பிரதமர் சென்று, மோதலில் ஈடுபட்டுள்ள இரு சமூக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.