ஹிட் படம் கொடுத்தும் பாலிவுட்டில் படம் இயக்க விரும்பாத சித்திக்

மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சித்திக். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான பாடிகார்ட் திரைப்படம், தமிழில் விஜய் அசின் நடிப்பில் காவலன் என்கிற பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தமிழிலும் இந்த படத்தை சித்திக்கே இயக்கியிருந்தார்.

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியில் சல்மான்கான் நடிப்பில் பாடிகார்ட் என்கிற பெயரிலேயே இந்த படத்தை இயக்கி அங்கேயும் வெற்றி பெற செய்தார் சித்திக். அந்த சமயத்திலேயே கிட்டத்தட்ட 250 கோடி இந்த படம் வசூலித்தது. இப்படி பாலிவுட்டில் தனது அறிமுகப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் தொடர்ந்து ஹிந்தியில் படம் இயக்குவதை தவிர்த்து விட்டார் சித்திக்.

அதற்கு காரணம் அவரது படங்களில் அடிப்படையான விஷயமே நகைச்சுவைதான். மலையாளத்திலிருந்து வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் போது நடைமுறை சிரமங்கள் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ள சித்திக், தமிழில் கூட என்னால் எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் ஹிந்தியில் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல கதாசிரியர் வேண்டும். அது மட்டுமல்ல மலையாள மொழிக்கு உரிய பல நகைச்சுவை காட்சிகளை இந்தியில் மாற்றி எடுத்தால் அவ்வளவாக எடுபடாது என்றும் அப்போது கூறியிருந்தார் சித்திக்.

பாடிகார்ட் படத்தை தெலுங்கிலும், கன்னடத்திலும் அவரையே இயக்கச் சொல்லி அழைப்பு வந்தபோது தமிழ், இந்தியில் இயக்கிய அளவிற்கு தன்னால் தெலுங்கிலும் கன்னடத்திலும் அந்த படத்தை இயக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார் சித்திக்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.