சென்னை: நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பேசியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; வேற்றுமை உணர்வு வேண்டாம்” என வீடியோ மூலமாக மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த ஆண்டு வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளைக் கடந்த ஆண்டு. தந்தை பெரியார் எதற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதை மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என முதல்வர் எங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள். மிகப்பெரிய ஆளுமைகள் நமக்கு நிறைய புத்திமதியை கூறியுள்ளனர். மனிதநேயம் என்றால் என்ன என்பது குறித்த அடிப்படை விஷயத்தை பல்வேறு விதங்களில் வலியுறுத்தியுள்ளனர். அதை கரோனா காலக்கட்டத்தில் தான் எல்லோரும் உணர்ந்தனர்.
இன்று உயர் கல்வி நிறுவனங்களில் பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பெருமையாக பேசுகிறோம். மற்ற மாநிலங்கள் பொறாமைபடுகின்றனர். முதல்வரை பலரும் பாராட்டும் சூழலில், ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அது குறித்த விவரங்களை நான் சொல்ல விரும்பவில்லை.மாணவர்களாகிய நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது உங்கள் புத்தியை கூர்மைபடுத்த வேண்டும் என தான் ஆசைப்படுகிறோம்; கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படவில்லை. ஆனால், ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. சோர்வடையச் செய்கிறது.
காரணம் நாங்கள் மாணவர்களை அறிவுசார்ந்து முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் ஒரே ஊர்காரராக இருந்தும் உங்களுக்குள்ளேயே இருக்கும் வேற்றுமை உணர்வை விதைக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் இந்த அரசு. தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டுள்ள மாணவர், அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரின் தங்கையிடம் தொலைபேசியில் பேசினேன்.
என்னுடைய அந்த இரண்டு தம்பி, தங்கையை பாதுகாப்பான முறையில் ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அது என் கடமை. அதேசமயம், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களும் எல்லோரையும் நம்முடையவர்களாக பாருங்கள். தயவு செய்து இதை மனதில் ஏற்றுக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்துங்கள். நமக்குள் வேற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் செயல்படாதீர்கள். உங்களுக்காக பல திட்டங்களை தீட்டும் முதல்வரை பெருமைபட செய்யுங்கள்.
ஓர் அமைச்சராக நான் பேசவில்லை. உங்களின் அண்ணனாக சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு அது தான் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத வண்ணம் நீங்கள் பார்த்துகொள்ளவேண்டும். மாற்றத்தை உருவாக்க வேண்டிய வயது பள்ளி மாணவர்களாகிய உங்களுடையது. முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் சக்திகளாக நீங்கள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இறுதியில், “எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை, அதேபோல எந்த மனிதனும் எனக்கு மேலானவன் இல்லை” என பெரியாரின் வாசகத்துடன் வீடியோ முடிகிறது.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயது மாணவர், அவரது 14 வயது தங்கையை 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதியப் பின்னணி கொண்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கான அரசு இது!
பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்!
நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்… pic.twitter.com/ZfGk8shEGf
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 11, 2023