புதுடில்லி : அவதுாறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் 23 நீதிபதிகளை இட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அமைப்பின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், நாடு முழுதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களின், 23 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் எம் பிரச்சக்கை, பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் -அல்பேஷ் ஒய் கோக்ஜே, குமாரி கீதா கோபி மற்றும் சமீர் ஜே தவே,- முறையே அலகாபாத், சென்னை மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் -அரவிந்த் சிங் சங்வான், அவ்னீஷ் ஜிங்கன், ராஜ் மோகன் சிங், அருண் மோங்கா ஆகியோர், முறையே அலகாபாத், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களுக்கு இட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மேலும், அலகாபாத், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவேக் குமார் சிங், மதுரேஷ் பிரசாத், முறையே சென்னை, கோல்கட்டா உயர் நீதிமன்றங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சி.சுமலதாவை, குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் முன்மொழிந்தது. ஆனால் அவர், கர்நாடகா அல்லது ஆந்திராவுக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார்.
இதையேற்று நீதிபதி சி.சுமலதா, கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.நரேந்தரை, ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதே போல், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னுாரி லக் ஷ்மன், எம்.சுதீர் குமார், ஜி.அனுபமா சக்ரவர்த்தி ஆகியோரை, முறையே ராஜஸ்தான், சென்னை மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்ய, கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிபேக் சவுத்ரி, லபிதா பானர்ஜி, சேகர் பி.சரப் ஆகியோர், முறையே பாட்னா, பஞ்சாப், ஹரியானா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்களுக்கும், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் துப்பலா வெங்கட ரமணா, சி.மானவேந்திரநாத் ராய் ஆகியோர், முறையே ம.பி., மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர குமார், எஸ்.பி.கேசர்வானி, பிரகாஷ் பாடியா ஆகியோரை, முறையே ம.பி., கோல்கட்டா, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்