நாங்குநேரி சம்பவம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த நீதிபதி கே. சந்துரு.. "பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்ல"

சென்னை:
நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர் சின்னதுரை, சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த மாணவர் மட்டுமல்லாமல் அவரது தங்கைக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

மேலும், இந்த கோர சம்பவத்தை பார்த்த அவரது தாத்தா, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாதிய வன்மத்தால் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முக்கியமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கவும், பள்ளி மாணவர்கள் இடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிடவும் அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவை இந்த விவகாரத்தில் நியமனம் செய்ததற்காக சமூக வலைதளங்களில் முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘ஜெய்பீம்’ திரைப்படம், நீதிபதி கே. சந்துருவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.