மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்ப காட்டுக்குள் சென்ற தமிழக குடும்பங்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு இரா.முத்தரசன் கடிதம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தபோது, மோரேவில் இருந்து மியான்மருக்கு தப்பிச் சென்ற மெய்தி மற்றும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 230 இந்தியர்களில் பலர் 100 நாட்களுக்கும் மேலாக மியான்மரின் அடர்ந்த காடுகளில் சிக்கித் தவிப்பதாக கடந்த ஆக. 13-ம் தேதி ‘இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது.

அவர்களுக்கு எந்த நிவாரணமும், ஆதரவும் கிடைக்காததால் உயிருக்குப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் குகி-ஸோ பழங்குடியினரால் சூழப்பட்ட நிலையில், தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எல்லைகளைத் தாண்டி மியான்மருக்குள் சென்றிருக்கின்றனர்.

கலவரத்தில் அவர்களது வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டுவிட்டன. தற்போதை நிலவரப்படி, காட்டுக்குள் சென்று தப்பித்த அவர்கள், அங்குள்ள மக்களின் உதவியுடன் பெயர் தெரியாத இடத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. வாழ்வதாரங்களை இழக்கும் முன்பு, இந்திய ராணுவத்தின் உதவியுடன் அவர்களை கண்டறிந்து, பத்திரமாக மீட்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, தமிழ் குடும்பங்கள் உட்பட 230 பேரையும் மீட்டு, அந்தந்த இடங்களில் பாதுகாப்பாக குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை மீட்டெடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.