கம்போடியாவில் பள்ளி வளாகத்தில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

புனோம் பென்,

கம்போடியா நாட்டில் 1970-களில் தொடங்கிய உள்நாட்டு போர் 1990-களின் இறுதி வரை நீடித்தது. இந்த போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரின்போது ஏராளமான கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

போர் முடிந்த சமயத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டன.

வெடிமருந்து கிடங்குகள்

எனினும் சில இடங்களில் அந்த வெடிகுண்டுகள் வெடிமருந்து கிடங்குகளில் புதைத்து வைக்கப்பட்டன. அந்தவகையில் கம்போடியாவின் வடகிழக்கு மாகாணமான கிராட்டியில் உள்ள குயின் கோசாமாக் என்ற இடம் வெடிமருந்து கிடங்காக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த இடத்தில் உள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

இதனால் அந்த இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. தற்போது அந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதலாக வகுப்பறை கட்ட பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

பள்ளிக்கூடம் மூடல்

இந்தநிலையில் கட்டிட பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான கண்ணிவெடிகள் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டு அதன் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வருகிற 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் எஞ்சி இருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் முழுவதையும் அகற்றுவதை நோக்கமாக கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.