சபரிமலை:நேற்று மலையாள ஆண்டுபிறப்பான ஆவணி 1 ல் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
கேரளாவில் மலையாள ஆண்டு ஆவணி மாதம் பிறக்கிறது. அதன்படி அங்கு நேற்று ஆவணி பிறந்ததையொட்டி இம்மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டபோது ஐயப்பனை தரிசிப்பதற்கான கூட்டம் சரங்குத்தி அருகே வரை நீண்டு இருந்தது. நடை பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தது.
ஆக.21 வரை பூஜைகள் நடைபெறுகிறது. அனைத்து நாட்களிலும் காலை உஷபூஜை, மதியம் உச்ச பூஜை களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜை ஆகியவற்றுடன் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜை, இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர் ஆக. 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன் பின்னர் திருவோண பூஜைகளுக்காக ஆக.26 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இந்நிலையில் பம்பை திருவேணி சந்திப்பில் புலி மேல் அமர்ந்திருக்கும் ஐயப்பன் சிலையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நேற்று திறந்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement