வார இறுதி நாள்கள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சூப்பர் அப்டேட்!

பண்டிகை நாள்கள், தொடர் விடுமுறை நாள்கள் ஆகியவற்றில் தான் மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். இதனால் ரயில்கள், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் சிரமத்தைப் போக்குவதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போது வார இறுதி நாள்களிலும் மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். பயணிகளின் வருகை வார இறுதி நாள்களில் அதிகரிப்பதால் அதை பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் டிக்கெட்டுகளை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தொடர்ந்து அந்த கொடுமை அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வார இறுதி நாள்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

18,19, 20 ஆகிய மூன்று தினங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடப்பதால் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் சிறப்பு பேருந்துகளால் தேவையற்ற சிரமத்தை தவிர்க்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.