லண்டன், பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொன்று, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில், கடந்த 2015 ஜூன் -முதல், 2016- ஜூன் வரையிலான கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கு அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்த புகாரின்படி, 2019ல் போலீசார் விசாரணையை துவங்கினர். ஏழு குழந்தைகள் இறந்து, ஆறு குழந்தைகள் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது, இந்த மருத்துவமனையில் லுாசி லெட்பி, 33, என்ற செவிலியர் பணியாற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் 2018ல் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முடிந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், லுாசி லெட்பி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் லுாசி லெட்பிக்கு, நீதிபதி கோஸ் நேற்று ஆயுள் தண்டனை விதித்தார்.
அவர் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
செவிலியரின் இந்தச் செயல், மருத்துவ தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் தகர்க்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தையையும் திட்டமிட்டு கொல்ல முடிவு செய்துள்ளது விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லுாசி லெட்பி வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லுாசி லெட்பி பணிபுரிந்த மருத்துவமனையில், குழந்தைகள் நல டாக்டராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் அளித்த முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே செவிலியர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement