பெங்களூரு : நீண்ட போராட்டத்துக்கு பின், 42 கோடி ரூபாய் பில் பாக்கியை, ஒப்பந்ததாரர்களுக்கு நேற்று பெங்களூரு மாநகராட்சி வழங்கியது.
முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, பெங்களூரு மாநகராட்சி சார்பில் வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் பலருக்கு பில் தொகை வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், ‘பணிகளை ஆய்வு செய்யாமல் பில் தொகையை வழங்க முடியாது’ என, உறுதியாக கூறி விட்டனர். முறைகேடுகளை விசாரிக்க, நான்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில், பாக்கி பில் தொகை வழங்கவில்லை என்றால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒப்பந்ததாரர்கள் கூறி வந்தனர். பில் தொகை வழங்க கோரி, போராட்டமும் நடத்தினர்.
கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து முறையிட்டனர். ‘சரியான முறையில் பணி செய்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக பில் தொகை வழங்கப்படும்’ என்று முதல்வர், துணை முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 42 கோடி ரூபாய் பில் தொகையை, ஒப்பந்ததாரர்களுக்கு நேற்று பெங்களூரு மாநகராட்சி வழங்கியது. முதல் கட்டமாக, 25 லட்சம் ரூபாய் வரையிலான பில் தொகைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று கூறுகையில், ”முதல் கட்டமாக சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஒப்பந்ததாரர்களின் பில்கள் குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கை வந்த பின், படிப்படியாக பணம் வழங்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement