ஆளுநர் மகள் திருமணச் செலவு: தயாநிதி மாறன் கேட்ட கேள்வி – உடனே விளக்கம் அளித்த ராஜ் பவன்!

திமுக அரசின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி முதல் திமுகவினர் பலரும் ஆளுநரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஊட்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநரின் மகள் திருமணம் நடைபெற்றது குறித்து திமுக எம்.பி.

கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கு பதிலளுக்கும் வகையில் ஆளுநர் மாளிகை விளக்கமும் அளித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன், “தமிழ்நாட்டு ஆளுநர் அவரது அதிகாரங்களின் எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநரை கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆளுநரின் வேலை ஒரு தபால்காரர் வேலைதான். ஆனால், அவர் தேவையில்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு புதுச்சேரி மாணவர்களுக்கு தமிழிசை எதிரி – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு ஆகும். அது மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை இதுபோன்று சிரமத்துக்குள்ளாக்கி வருகிறார். மத்திய அரசு துணை ஜனாதிபதி அல்லது வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை தனக்கு வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார்.

ஆர்.என்.ரவி, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமண நிகழ்வை நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, இதற்கு அவர் பதில் அளிப்பாரா” என்று கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறனின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருமண நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் வெளியே வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கு கூட அரசு வாகனங்கள் பயன்படுத்த வில்லை.

ஆளுநர் மாளிகையின் சமையற்கூடமோ, ஊழியர்களோ பயன்படுத்தப்பட வில்லை. மின்சாரமும் வெளியே ஏற்பாடு செய்யப்பட்டது. பூ அலங்காரத்துக்காக கூட அங்குள்ள பூக்களை உபயோகிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.