மாஸ்கோ, ரஷ்ய அதிபருக்கு எதிராக புரட்சி நடத்திய, தனியார் ராணுவ படையின் தலைவர் யேவ்ஜெனி பிரிகோஷின், விமான விபத்தில் உயிரிழந்ததை, ரஷ்ய ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால், அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களைக்கடந்தும் போர் தொடர்கிறது.
இந்தப் போரில் ரஷ்ய படைகளுக்கு உதவியாக, ‘வாக்னெர்’ என்ற ரஷ்யாவின் தனியார் ராணுவப் படையும் களமிறங்கிஉள்ளது.
கடந்த ஜூன் மாதம், வாக்னெர் படையின் தலைவர் யேவ்ஜெனி பிரிகோஷின், திடீரென புரட்சியில் ஈடுபட்டார். உக்ரைனில் உள்ள தன் படைகளை ரஷ்யாவுக்கு திரும்பும்படி உத்தரவிட்டார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவானது.
ஆனால், கடைசியில் சில மணி நேரங்களில் இந்த புரட்சி பிசுபிசுத்தது. இதையடுத்து, பிரிகோஷின் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்று முன்தினம் ஒரு தனி விமானம் சென்றது. இதில், பிரிகோஷின் உட்பட ஏழு பயணியர், மூன்று விமான ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிரிகோஷின் உட்பட, 10 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பிரிகோஷின் இருந்ததை, ரஷ்ய ராணுவம் நேற்று உறுதி செய்துள்ளது.
ரஷ்ய அதிபருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட முயன்றதால், அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்கிய நிலையில், அதனுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement