39 ஆண்டுகளாய் நடைபெற்றாலும் வடிவங்கள் மாற்றப்பட்டாலும் அதே பொலிவுடன் நீடிக்கிறது துணைக்கண்ட நாடுகளுக்கு இடையிலான ஒரே தொடரான ஆசியக்கோப்பை.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் பைசா வசூல் செய்யும் என்றாலும் இலங்கை – பங்களாதேஷ் நாகினி நடன சண்டைகளையும், பாகிஸ்தான் – ஆப்கானுக்கு இடையில் போனத் தொடரில் களத்தில் நடந்தேறிய நாடகங்களையும் புறந்தள்ள முடியாது. வரவிருப்பதை எதிர்நோக்குவதற்கு முன்பாகக் கடந்த சீசன்களில் தீர்க்கப்படாத கணக்குகளையும் நேர்செய்யப்பட்ட சர்ச்சைகளையும் உள்ளடக்கிய போட்டிகள் பற்றிய ஒரு ரீவைண்ட்.
இந்தியா Vs இலங்கை, இறுதிப் போட்டி – 2008:
என்ன நடக்கிறதென உணர்வதற்குள் எல்லாமே முடிந்து விடும்படியான ஒரு சுழலுக்குள் சிக்கி தனது மொத்த விக்கெட்டுகளையும் இந்தியா இழந்த போட்டியிது. மெண்டீஸ் எனப் பெயரிடப்பட்ட அந்தச் சூறாவளியை சூப்பர் 4 சுற்றில்கூட இந்தியாவுக்கு எதிராக இறக்காத இலங்கை, சர்ப்ரைஸ் பேக்கேஜாக இறுதிப் போட்டியில் இறக்கியது. இந்தச் சுழல் வியூகம் அவர்களுக்குக் கோப்பையை உடைமையாக்கியது.

சனத் ஜெயசூர்யாவின் சதத்திற்கும் அவரது பவுண்டரி, சிக்ஸர் மழைக்கும் இந்தியா தயாராகயிருந்தது. அதனால் அது நடந்து 274 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதுகூட அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் அவுட் ஆஃப் சிலபஸில் வந்து சேர்ந்த மெண்டீஸ்தான் எதிர்பாராத எதிரி. 9 ஓவரின் முடிவில்கூட 76 ரன்களோடு சாவகாசமாக இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் வீசவந்த முதல் ஓவரிலேயே சேவாக்கை வெளியேற்றிய அவரது கேரம் பாலும் யோசிக்கவே அவகாசமின்றி யுவராஜின் மிடில் ஸ்டம்பைக் காவு வாங்கிய பந்தும் இந்தியாவினை உறையச் செய்தன. என்ன வேரியேஷன் என்றே கணிக்க முடியாமல் ஒன்றல்ல, ரெண்டல்ல இந்தியாவின் ஆறு பேட்ஸ்மேன்களை மெண்டீஸின் மிஸ்ட்ரி பௌலிங் மடக்கிப்போட்டது. 100 ரன்கள் வித்தியாசத்தில் நம்பவே முடியாத மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.

“மெண்டீஸின் பந்துவீச்சிற்கு எங்களிடம் பதில் இல்லை” என தோனி போட்டிக்குப் பின்பு கூறியிருந்தார். அவரது பந்துவீச்சு வெகு சீக்கிரமாகவே டீகோடிங் செய்யப்பட்டு விட்டாலும் இந்த ஒரு போட்டி காலத்திற்கும் நின்று பேசும்படியாக மாறிவிட்டது.
இந்தியா vs பாகிஸ்தான், 2010:
கடுப்பான கம்ரன் அக்மல், பந்துக்குப் பந்து அப்பீல் செய்ய கம்பீர் முறைக்க, பதிலுக்கு அவர் எகிற, நடுவில் வந்து தோனி பிரித்துவிட எனக் கலவரக் காட்சிகள் காணக்கிடைத்தன.

கம்பீர் – தோனி இணை சிறப்பாகவே சேசிங்கைக் கட்டமைத்தது. கம்பீர் ஆட்டமிழந்தும் இந்தியாவுக்குச் சாதகமாகவே சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் பிடி 43-வது ஓவரில் தோனியும் அடுத்து ஜடேஜாவும் வெறியேற, தளர்ந்து பின் ரெய்னாவால் இறுகியது. இறுதி ஓவரில் ஆறு ரன்கள் வேண்டுமென்ற நிலையில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் ஷார்ட் பால் ரெய்னாவை வெளியேற்றி சப்தநாடியையும் ஒடுங்கச் செய்தது. ஏனெனில் மிஞ்சியது பௌலர்கள் மட்டுமே. அடுத்த இரு பந்துகளில் மூன்று ரன்களை பிரவீன் குமார் எடுக்க, அக்தர் ஹர்பஜனை சீண்டி மைண்ட்கேம் ஆட, அதுவே பேக் ஃபயர் ஆனது.

சற்றே உஷ்ணம் கூடிய ஹர்பஜன் அதனைக் கடைசிப்பந்திற்கு முந்தைய பந்திடம் கொட்டித் தீர்க்கும் முடிவோடு லெந்தை முன்கூட்டியே ஊகித்து அதனை மிட்விக்கெட்டில் சிக்ஸராக்கினார்.
1986 Austral – Asia கோப்பை இறுதிப்போட்டியில் சேத்தன் ஷர்மா – ஜாவத் மியான்தத்துக்கு இடையே நடந்தேறிய நாடகத்தை மீண்டுமொரு முறை பார்த்த உணர்வு ஏற்பட்டது. 2011 கோப்பையை வெல்ல இந்த ஆசியக்கோப்பையில் கிடைத்த உந்துதலும் ஒரு காரணமே.
இந்தியா vs பாகிஸ்தான், 2014:
யார் வெற்றியாளர் என்பதனை இறுதி ஓவரே தீர்மானிக்கும் த்ரில்லிங் இந்தியா பாகிஸ்தான் சீரிஸ் வரிசையில் இன்னுமொரு முக்கியப் போட்டி இது. இந்தியா வசமிருந்த வெற்றியை லாவகமாக அஃப்ரிடியின் அதிரடி அபகரித்தது.

ரோஹித், அம்பத்தி ராயுடு, ஜடேஜாவின் அரைசதங்களால் இந்தியா 245 ரன்களை எட்டியது. பாகிஸ்தானின் சேஸிங்கில் ஹஃபீஸ் ஆங்கரிங் ரோலை எடுத்துக் கொண்டு தனது இன்னிங்க்ஸை சிறப்பாகக் கட்டமைத்தார், 200 ரன்களை அணி எட்டிய போது அவர் வெளியேற 39 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே தேவையென சுலப சமன்பாடு பாகிஸ்தானுக்கு. ஆனால் மக்ஸுத்தின் ரன்அவுட் சகலத்தையும் மாற்றியது. 235-ல் இருந்து அடுத்த இரு ரன்களை எட்டுவதற்குள் மூன்று விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது இந்தியாவிற்கான வாய்ப்பினை பிரகாசமாக்கியது.
அதுவும் ஒன்பதாவது விக்கெட்டாக அஷ்வினின் கேரம் பாலில் ஆட்டமிழந்த அஜ்மல் ஐந்து பந்துகளே மீதம் பத்து ரன்கள் வேண்டும் என்ற நிலையில் வெளியேறியிருக்க மொத்த பளுவும் அஃப்ரிடியின் தோளில் விழ, அவர் தனது பவர் ஹிட்டிங் அவதாரத்தைத் தட்டி எழுப்பினார். நான்கு பந்துகளில் 9 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் அவ்வளவெல்லாம் பொறுமையில்லை என இரு பேக் டு பேக் சிக்ஸர்களிலேயே இலக்கை எட்டினார்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான், 2018:
அனுபவமிக்க இந்திய அணியுடனான போட்டியை ஒரு பெரிய மேடையில் டை ஆக்கி எந்தக் காலத்திலும் தங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாதென்ற பாடத்தை மொத்த கிரிக்கெட் உலகிற்கும் ஆப்கானிஸ்தான் நிரூபித்த போட்டியிது. மொகம்மத் ஷாஜத்தின் சதத்தையும், நபியின் அரைசதத்தையும் கழித்தால் மொத்த ஆப்கானின் பேட்டிங்குமே தடுமாறியிருந்தது. 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

இந்தியாவின் மிடில் ஆர்டரின் சொதப்பலான ஆட்டம் கே.எல்.ராகுல் – அம்பத்தி ராயுடு ஏற்படுத்தித் தந்த அற்புதமான 110 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை வீணடித்தது. அஃப்தாப் ஸ்லோ பால்களால் ஏமாற்றித் துல்லிய யார்க்கர்களாலும் பவுன்சர்களாலும் திணறடிக்க, பந்தை நன்றாகத் திரும்ப வைத்து களமும் ஸ்பின்னர்களுக்கு ஆதரவளித்தது. ஆப்கானின் அற்புத பௌலிங் தெரிந்ததுதான் எனினும் இப்போட்டியில் அதனைத் தாண்டியும் அசத்தியது அவர்களது அருமையான ஃபீல்டிங். பவுண்டரி லைனில் பல பந்துகள் நிறுத்தப்பட்டது மட்டுமின்றி மூன்று ரன்அவுட்களும் போட்டியை யூ-டர்ன் போட வைத்தன. இறுதி ஓவரில் ஏழு ரன்கள் என வந்து நிற்க அங்கே ரஷித்தின் பௌலிங் மட்டுமல்ல ஜடேஜாவின் அவசரமும் இந்தியாவுக்கு எதிராகியது. கலீலுக்கு ஸ்ட்ரைக் தராமல் முதல் பந்தை வீணடித்தது வரை சரிதான். ஆனால் இரு பந்துகளில் ஒரு ரன்தான் வேண்டுமெனும் நிலையில் பேக் ஆஃப் லெந்த் டெலிவரியை புல் செய்ய முயன்று அதனையும் சரியாகச் செய்யாமல் மிஸ்டைம் செய்து மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் சமமாக, ஒரு பந்து எஞ்சியிருப்பினும் விக்கெட் இல்லாததால் போட்டி டை ஆனது. தொடரிலிருந்து வெளியேறினாலும் முழு பலத்தோடு இருந்த இந்தியாவுடனான போட்டியை டை செய்ததே இறுதிவரை விடாமல் தொடர்ந்த ஆப்கானுக்குக் கிடைத்த வெற்றிதான்.
இந்தியா vs பங்களாதேஷ், இறுதிப்போட்டி – 2018:
இத்தொடரில் ஏற்கெனவே பங்களாதேஷை சூப்பர் 4 சுற்றில் ஏழு விக்கெட்டில் வீழ்த்தியிருந்தாலும் ஆப்கானுடன் டை ஆன போட்டி சற்றே இந்தியாவின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருந்தது. போட்டியின் போக்கும் அதையே பறைசாற்றியது. லிட்டன் தாஸின் 121 அநாயசமாக வந்து சேர்ந்தது எனினும் குல்தீப் மற்றும் கேதாரின் விக்கெட் வேட்டையாடிய ஸ்பெல்களும் சாஹல், பும்ரா மற்றும் புவ்னேஷ்வரின் எக்கானமிக்கல் பௌலிங்கும் 120/0 என இருந்த பங்களாதேஷை 222-க்கு சுருட்டியது.
லோ ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய வேண்டுமென்ற கட்டாயத்திலிருந்த பங்களாதேஷ் பந்தைப் பட்டமாக்கி லைன் அண்ட் லெந்த் நூல் கொண்டு மிக அருமையாகவே கட்டுப்படுத்தியது. ஸ்டம்பைக் குறிவைத்து வீசப்பட்ட பந்துகள் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்து ரன்கள் வரத்தைக் குறைத்தன. 100 ரன்களை 139 பந்துகளில் எட்டிய இந்தியா அடுத்த 100 ரன்களையும் 134 பந்துகளில்தான் எடுத்திருந்தது. ஆட்டத்தை முடுக்குவிக்க பங்களாதேஷ் அனுமதிக்கவேயில்லை.
எனினும் 19 ரன்களோடு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறியிருந்த கேதர் 48-வது ஓவரில் ஜடேஜா வெளியேறியதும் திரும்பியிருந்தார். இறுதி இரு ஓவர்களில் 9 ரன்களே தேவையெனினும் முஸ்தாஃபிஜுர் மற்றும் மஹ்மதுல்லாவின் மிரட்டும் பௌலிங் அதனைக் கடினமாக்கியது. ஹாம்ஸ்ட்ரிங்கால் அவதிப்பட்டாலும் கேதவ் மறுமுனையில் பௌலர்கள் இருந்ததால் பெரிய ஷாட்டுக்கு முயன்று ரிஸ்க் எடுக்கவில்லை. ஆப்கானுக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இறுதியில் செய்த தவறினைச் செய்யாமல் சிங்கிளாகவே சேர்த்தார். அதன் விளைவாக நரம்பைச் சில்லிட வைப்பவையாக ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டிருந்தது.

இறுதிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட சூப்பர் ஓவருக்குள் போட்டி நுழையுமா என்ற பதற்றம் உருவாக அவரது காலில் பட்ட பந்து ஷார்ட் ஃபைன் லெக்கில் நகர்ந்து வெற்றியை உறுதிசெய்ய ஏழாவது ஆசியக்கோப்பையை இந்தியா கைப்பற்றியது.

உலகக்கோப்பை மேல் கண்வைத்திருந்தாலும் ஆசியக் கோப்பை அதே வகையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதே. பனிப் போரல்ல கடினப் பாறையையும் உருகி ஓடவைக்கும் அனல்தகிக்கும் மோதல் இது. இந்த சீசனிலும் இன்னமும் இதன் வெப்பம் கூடும்.