மேல் மாகாணத்தில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்னோடி திட்டம் – போக்குவரத்து அமைச்சர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடித் திட்டம் இதுவெனவும், இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

உத்தேச திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள மின்சார பஸ்களின் எண்ணிக்கையை சுமார் 200 ஆக அதிகரிப்பது மிகவும் பொருத்தமானது என அமைச்சரவை அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த பஸ்களினால் அதிக வீதிகளுக்கு பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்க முடியும்.

இதன்படி, மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் சார்பில் இயங்குவதற்கு அரச தனியார் கூட்டுத் திட்டமாக 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்வதற்கு கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பொதுப் போக்குவரத்திற்கு மின்சார பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கையில் மின்சார பஸ்களுக்கு பணம் முதலீடு செய்ய முடியாததனால், இலங்கை போக்குவரத்து சபை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து, மேல் மாகாணத்தில் முன்னோடி திட்டமாக மின்சார பஸ்களை பயன்படுத்த உள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டினூடாக 200 மின்சார பஸ்களை இலங்கைக்கு கொண்டு வந்து, நாடு முழுவதும் மின்சார சார்ஜிங் நிலையங்களை நிறுவி, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் இவை பயன்படுத்தப்படும். அதனூடாக பெறப்படுகின்ற வருமானத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகளை செலுத்தி முடித்ததன் பின்னர் அந்த பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.